அரசுக்கு மீண்டும் அனுப்பப்பட்ட 7.99 லட்சரூபாய்: ஊக்கத் தொகையின்றி தவிக்கும் ஆதிதிராவிட பள்ளிக்குழந்தைகள்

அரசுக்கு மீண்டும் அனுப்பப்பட்ட 7.99 லட்சரூபாய்: ஊக்கத் தொகையின்றி தவிக்கும் ஆதிதிராவிட பள்ளிக்குழந்தைகள்

ஆதி திராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவிகளின் பள்ளி இடைநிற்றலைத் தவிர்ப்பதற்காக அரசு வழங்கும் நிதி வங்கி கணக்கு விபரங்கள் சரியாக இல்லாததால் மீண்டும் அரசிற்கே செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக ஆதிதிராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவிகளின் பள்ளி இடைநிற்றலை தவிர்ப்பதற்காக மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு அரசு ஆண்டுதோறும் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, வகுப்பு வாரியாக ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்க செயலாளர் வீரையா தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு கேள்விகளை எழுப்பியிருந்தார். அதில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவிகளின் எண்ணிக்கை என்ன? எத்தனை மாணவிகள் இந்த திட்டத்தில் பயன்பெறுகிறார்கள்? இந்த ஆண்டில் எத்தனை மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட கேள்விகளைக் கேட்டிருந்தார்.

இதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது, அதன் படி, மாவட்டத்தில் மொத்த ஆதிதிராவிடர் மாணவிகளின் எண்ணிக்கை தங்களிடம் இல்லை என்றும், 2021-22-ம் ஆண்டில் 6 ஆயிரத்து 854 மாணவிகளுக்கு ரூ.65 லட்சத்து 29 ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 361 மாணவிகளுக்கு வங்கி கணக்கு விபரங்கள் சரியாக இல்லாததால் ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம் அரசின் வங்கி கணக்கிற்கே திரும்ப அனுப்பபட்டுள்ளதாகவும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கூறுகையில், "வங்கிக் கணக்கு விபரங்கள் சரியாக இல்லை என்றால், மீண்டும் சரிபார்த்து மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசிற்கே நிதி திரும்ப செலுத்தப்பட்டது தவறு. மாவட்ட நிர்வாகம் அந்த நிதியை சமன் செய்ய இதனைச் செய்த அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும்.

மேலும், மீண்டும் மாணவிகளுக்கு ஊக்கத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் மாணவிகளின் பெற்றோர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தப்படும்" என்று எச்சரிக்கை விடுத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in