
இந்தியாவின் அதிகரிக்கும் எல்லை தொல்லைகளின் மத்தியில், புதிதாக ஆயுத தளவாடங்கள் வாங்குவதற்கு பட்ஜெட்டில் ரூ1.62 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட அதிகமாகும்.
சீனா உடனான அதிகரிக்கும் உரசல்கள் மத்தியில் எப்போது வேண்டுமானாலும் மோதல் வெடிக்கலாம் என்ற சூழலில் இந்திய எல்லை காணப்படுகிறது. இந்த மோதல்கள் இரு நாடுகளுக்கு இடையிலான போராக வலுக்கவும் வாய்ப்பிருக்கிறது. புயலுக்கு முந்தைய அமைதிபோல, இந்திய எல்லை நெடுக சத்தமின்றி ராணுவ தளவாடங்கள் குவிப்பு, சாலைகள், சுரங்க வழிப் பாதைகள் அமைப்பு, குடியேற்றங்கள் உருவாக்கம் எனப் பல்வேறு நடவடிக்கைகளை சீனா மேற்கொண்டு வருகிறது. பதிலடியாக இந்தியாவும் உரிய நடவடிக்கைகளை எல்லையில் மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழல், ராணுவ பலத்தை மேலும் கட்டமைக்கவும், ஆயுத தளவாடங்களை அதிகரிக்கவும் நிர்பந்திக்கின்றன. அந்த வகையில் நடப்பு பட்ஜெட் அறிவிப்பில், பாதுகாப்பு துறைக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பாதுகாப்பு துறைக்கென ரூ.5.94 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட்டின் ஒதுக்கப்பட்டதைவிட(ரூ.5.25 லட்சம் கோடி) அதிகம்.
இந்த ரூ5.94 லட்சம் கோடியில் ஆயுதத் தளவாடங்கள் வாங்குவதற்காக ரூ1.62 லட்சம் கோடி ஒதுக்கப்படுகிறது. போர் விமானங்கள், கப்பல்கள் மற்றும் நவீன ஆயுத ரகங்கள், ராணுவத்துக்கான வன்பொருட்கள் இவற்றில் அடங்கும். இது கடந்தாண்டு ஒதுக்கீட்டைவிட(ரூ1.52 லட்சம் கோடி) சற்று அதிகமாகும்.
பாதுகாப்பு துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டில் பெருமளவு தொகை ஊதியம் மற்றும் ஓய்வூதியத்துக்காகவே ஒதுக்கீடு ஆகிறது. ஊதியம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக ரூ2.70 லட்சம் கோடியும், ஓய்வூதியர்களுக்காக ரூ1.38 லட்சம் கோடியும் செலவாகிறது. மேலும் இதர சில்லறை செலவினங்கள் உட்பட, ஒட்டுமொத்தமாக பாதுகாப்பு துறைக்கு என வரும் நிதியாண்டில் ரூ.5,93,537.64 கோடி செலவிடப்பட இருக்கிறது.