48 கோடி ரூபாய் செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு: சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்கின் மாமனார் கைது

48 கோடி ரூபாய் செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு: சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்கின்  மாமனார் கைது

செம்மரக்கட்டை கடத்திய வழக்கில் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்கின் மாமனார் பாஸ்கர் என்ற கட்டை பாஸ்கரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கட்டை பாஸ்கர்
கட்டை பாஸ்கர்

சென்னை அண்ணாநகர் ஏ பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் என்ற கட்டை பாஸ்கர். இவர் சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் மகனும், ஜெயா தொலைக்காட்சியின் சிஇஓவான விவேக்கின் மாமனாரும் ஆவார். கட்டை பாஸ்கர் மீது ஆந்திராவிலிருந்து சட்டவிரோதமாக செம்மரக்கட்டையைக் கடத்தி, பல நாடுகளுக்கு சப்ளை செய்ததாக 20-க்கும் மேற்பட்ட கடத்தல் வழக்குகள் உள்ளன.

கடந்த 2017-ம் ஆண்டு சசிகலாவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, கட்டை பாஸ்கருக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கடந்த 2021-ம் ஆண்டு செம்மரம் கடத்தியதாக கட்டை பாஸ்கர் மீது மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். அத்துடன் அண்ணா நகரில் உள்ள பாஸ்கரின் வீடு மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள பர்னிச்சர் கடையில் சோதனை நடத்தினர். அப்போது கடையில் 48 கோடி ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பாஸ்கர் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு பாஸ்கரை ஆந்திர மாநில போலீஸார் செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில் 48 கோடி ரூபாய் செம்மரக்கட்டை பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் வைத்து கட்டை பாஸ்கரிடம் விசாரணை மேற்கொண்டனர். பல மணி நேர விசாரணைக்கு பின்னர் கட்டை பாஸ்கரை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in