
மருத்துவரின் செல்போனைத் திருடி, 3 லட்சம் ரூபாய் எடுத்து மதுபான விருந்து, லேப்டாப் என ஆடம்பரமாக செலவழித்த சிறுவனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கே.கே நகரைச் சேர்ந்த மருத்துவர் ராமச்சந்திரன். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கச் சென்ற போது, அவரது கணக்கிலிருந்து 3 லட்ச ரூபாய் சிறுக சிறுக யாரோ பணம் எடுத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அவர் உடனடியாக காவல் துறை இணை ஆணையரிடம் புகார் அளித்தார். இதையடுத்து அவரின் புகார் தி நகர் சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, மருத்துவரின் வங்கிக் கணக்கு எண்ணை வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது, அசோக் நகரில் உள்ள ஒரு செல்போன் கடைக்கு அடிக்கடி ஜிபே மூலம் பணம் அனுப்பப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் கடைக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறுவன் ஒருவன், அடிக்கடி வந்து ’ஜிபே’ மூலமாக கடையின் உரிமையாளருக்கு பணத்தை அனுப்பியது தெரியவந்தது.
பின்னர் கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அந்த சிறுவன் மருத்துவர் ராமச்சந்திரனின் உறவினரின் மகன் என்பதும், 14 வயதுடைய சிறுவன் மருத்துவரின் வீட்டில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து போலீஸார் சிறுவனை பிடித்து விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியானது.
சென்னை கே.கே நகரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த சிறுவன், சில வருடங்களாக மருத்துவர் ராமச்சந்திரன் வீட்டில் தங்கி படித்து வருகிறார். ஆடம்பர வாழ்க்கை வாழ நினைத்த சிறுவன் மருத்துவர் ராமச்சந்திரனின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை திருட முயற்சி செய்துள்ளார்.
ஆனால், வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது கடினம் என்பதால், மருத்துவரின் வங்கிக் கணக்கை வைத்து அவரது மனைவி செல்போனில் ’ஜிபே’ பதிவு செய்திருப்பது சிறுவனுக்குத் தெரியவந்தது.பின்னர் சிறுவன், ராமச்சந்திரன் மனைவியின் செல்போனை தெரியாமல் எடுத்து வந்து சிறுவனுக்கு நன்கு பழக்கமான அசோக் நகரில் உள்ள செல்போன் கடை உரிமையாளரிடம் கொடுத்து, ஜிபே மூலமாக சிறுக சிறுக 3 லட்சம் ரூபாய் வரை அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். பின்னர் அனுப்பிய பணத்தில் கடை உரிமையாளர் கமிஷனாக பாதித் தொகையை எடுத்துக்கொண்டு மீதி பணத்தை சிறுவனுக்கு கொடுத்தார். அந்த பணத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது விருந்து, லேப்டாப், விலையுயர்ந்த ஆடைகள் என சொகுசாக வாழ்ந்தார் என்பது தெரியவந்தது.
இதையடுத்து கடை உரிமையாளரிடமிருந்து 1.5 லட்ச ரூபாயை பறிமுதல் செய்த போலீஸார், பின்னர் சிறுவனை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.