'காபி டே' குழுமத்துக்கு ரூ.26 கோடி அபராதம்: 45 நாட்களுக்குள் செலுத்த கெடு

காபி டே நிறுவனம்
காபி டே நிறுவனம்'காபி டே' குழுமத்துக்கு ரூ.26 கோடி அபராதம்: 45 நாட்களுக்குள் செலுத்த கெடு

முறைகேடாக நிதியைப் பரிமாற்றம் செய்தது தொடர்பான விவகாரத்தில் காபி டே குழுமத்துக்கு 26 கோடி ரூபாயை பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அபராதம் விதித்துள்ளது.

காபி டே குழுமத்தின் தலைவராக இருந்த வி.ஜி.சித்தார்த்தா கடந்த 2019 ஜூலை மாதம் தற்கொலை செய்து கொண்டார். காபி டே குழுமத்துக்கு அதிக கடன்சுமை இருந்ததன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அதன்பிறகு, பல்வேறு தரப்பிலிருந்து காபி டே குழுமத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக காபி டே குழுமத்தின் இயக்குநர் குழு, ஓய்வுபெற்ற டிஐஜி அசோக் குமார் மல்ஹோத்ராவை நிறுவனத்தின் கணக்குகளை ஆய்வு செய்ய நியமித்தது.

பங்குச்சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான செபியும் முறைகேடாக நிதி பரிமாற்றம் நடைபெற்றதா என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கியது. இந்த விசராணையில் முறைகேடாக நிதி பரிமாற்றம் நடந்தது கண்டறியப்பட்டுள்ளது. காபி டே குழுமத்தில் காபி டே குளோபல், டேங்கிளின் ரீடெய்ல் ரியாலிட்டி டெவலப்மெண்ட்ஸ், டேங்கிளின் டெவலப்மெண்ட்ஸ், கிரி வித்யூத் லிமிடெட், காபி டே ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ், காபி டே டிரேடிங், காபி டே இகான் என 7 துணை நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிறுவனங்களிலிருந்து எம்ஏசிஇஎல் நிறுவனத்துக்கு நிதி பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. அத்துடன் இந்த நிதி, காபி டே நிறுவனத்தின் தலைவராக இருந்த வி.ஜி.சித்தார்த்தாவின் சொந்த கணக்குக்கும், அவரது குடும்பத்தினர் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் முறைகேடாக நிதி பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக செபி கண்டறிந்தது. இதன் காரணமாக 26 கோடி ரூபாய் அபராதத்தை காபி டே குழுமத்துக்கு செபி விதித்துள்ளது. இந்த தொகையை 45 நாட்களில் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இந்த எம்ஏசிஇஎல் நிறுவனம் முழுவதுமாக வி.ஜி.சித்தார்த்தாவின் குடும்பத்தினருக்குச் சொந்தமானது. அவரின் குடும்பத்தினர் 91.75 சதவீத பங்குகளை இந்த நிறுவனத்தில் வைத்துள்ளனர். காபி டே குழும நிறுவனங்களிலிருந்து ரூ.3,535 கோடி ரூபாய் முறைகேடாக எம்ஏசிஇஎல் நிறுவனத்துக்கு நிதிபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செபி குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in