அழைப்பு மையங்கள் மூலம் 6 மாதங்களில் 23.25 கோடி அபராதம் வசூல்: சென்னை போக்குவரத்து காவல் துறை அசத்தல்

அழைப்பு மையங்கள் மூலம் 6 மாதங்களில் 23.25 கோடி அபராதம் வசூல்: சென்னை போக்குவரத்து காவல் துறை அசத்தல்

சென்னை போக்குவரத்து காவல்துறை அழைப்பு மையங்கள் மூலம் கடந்த 6 மாதங்களில் 23.25 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 மார்ச் மாதம் முதல் சென்னை போக்குவரத்து காவல்துறை பணமில்லா 'இ-செலான்' முறைக்கு மாற்றப்பட்டது. ஆரம்பக் கட்டங்களில் இந்த முறை நன்றாக இருந்தாலும், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்கள் பலர் அபராதம் செலுத்தாத நிலை ஏற்பட்டது. இதனால் சென்னை போக்குவரத்து காவல்துறை அழைப்பு மையங்கள் அமைத்து அதன் மூலம் அபராதம் செலுத்தாதவர்களை செலுத்த வலியுறுத்தும் முறையை அறிமுகப்படுத்தியது.

அதனடிப்படையில் முதலில் 10 அழைப்பு மையங்கள் அமைக்கப்பட்டு பின்னர் அண்ணா நகர் TROZ மற்றும் மையப்படுத்தப்பட்ட ANPR கேமிரா அமைப்பு மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைக் கையாள்வதற்காக மேலும் இரண்டு தனித்தனி அழைப்பு மையங்கள் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் 12 அழைப்பு மையங்களாக செயல்பட்டு வந்தன. இம்முறையின் ஒரு பகுதியாக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கும் அபராதம் செலுத்துவதற்கான சிறப்பு அம்சமும் இதில் தொடங்கப்பட்டது.

இந்நிலையில் ஏப்ரல் 2022 முதல் அக்டோபர் 2022 வரை கடந்த 6 மாதங்கள் அழைப்பு மையங்கள் செயல் திறன் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டது. அப்போது இந்த 12 காவல் அழைப்பு மையங்களிலிருந்தும் தொலைபேசி வாயிலாக நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் வழக்குகள் தொடர்பாக, சம்பந்தப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, ஒரு வார காலத்திற்குள் அபராதம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. அத்துடன், கட்டத் தவறும் பட்சத்தில் மேற்படி வழக்குகள் விவரம் நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் மூலம் அறிவுறுத்தப்பட்டது.

அதனடிப்படையில் கடந்த 6 மாதங்களில் சாலை விதிமீறல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதன் உள்ளிட்ட வாகன விதிமீறல்கள் தொடர்பாக பழைய, புதிய வழக்குகள் உட்பட மொத்தம் 9 லட்சத்து 18 ஆயிரத்து 573 வழக்குகளில், 23 கோடியே 25 லட்சத்து 10 ஆயிரத்து 581 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

அபராதம் செலுத்துவதற்கான வசதியை மேம்படுத்த சென்னை போக்குவரத்துக் காவல் துறை சார்பில் குறுஞ்செய்தி அமைப்பு மற்றும் கட்டண வசதியை எளிமைப்படுத்துவதற்காக QR Code முறை ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளதால் அனைத்து வாகன ஓட்டிகளும் தங்கள் வாகனத்திற்கு எதிராக ஏதேனும் வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை ஆன்லைனில் சரிபார்த்து, அபராதத் தொகையை விரைவில் செலுத்துமாறு சென்னை போக்குவரத்து காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in