
மத்திய ரயில்வேயின் மும்பை கோட்டம், டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணம் செய்த பயணிகளிடம் இருந்து 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன் மூலம் இந்திய ரயில்வேயில் இந்த சாதனையை படைத்த முதல் கோட்டம் என்ற பெருமையை மும்பை பெற்றுள்ளது.
மும்பை கோட்டத்தில் ஏப்ரல் 2022 முதல் இந்த ஆண்டு பிப்ரவரி வரை 18 லட்சம் டிக்கெட் இல்லாத பயணிகளிடம் இருந்து 100 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு, 60 கோடி ரூபாயாக இருந்தது. டிக்கெட் இல்லாமல் ரயில்களில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு மக்களை மத்திய ரயில்வே எச்சரித்து வருகிறது. ஆனால் பயணிகள் அனைத்து அறிவுரைகளையும் புறக்கணிப்பதால் இவ்வளவு பெரிய அபராத வசூல் ஏற்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாகப் பேசிய மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதர், ” எங்களுக்கு அபராதம் வசூலிக்க இலக்கு எதுவும் இல்லை. பயணச்சீட்டுச் சரிபார்ப்புப் பயிற்சியின் மூலம் எங்களின் முக்கிய நோக்கம் பயணிகளின் பயணத்தை வசதியாக மாற்றுவதாகும். ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் டிக்கெட் இல்லாத பயணிகளால் சிரமம் ஏற்படுவதாக புகார் எழுந்ததையடுத்து டிக்கெட் சோதனையை தீவிரப்படுத்தினோம். இது ஒரு சாதனைதான்'' என்று கூறினார்.
இந்த அபராதத் தொகையானது புறநகர், எக்ஸ்பிரஸ் மற்றும் மும்பை பிரிவுக்குள் உள்ள மற்ற வழக்கமான ரயில்களில் டிக்கெட் இல்லாத பயணிகளிடமிருந்து வசூலிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மும்பை கோட்டத்தில் 77 ரயில் நிலையங்கள் மற்றும் 1,200 பயண டிக்கெட் பரிசோதகர்கள் உள்ளனர், அவர்கள் டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் பயணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 2019-20ம் ஆண்டில், மும்பை பிரிவு 15.73 லட்சம் பயணிகளிடமிருந்து ரூ. 76.82 கோடி அபராதம் வசூலித்தது.