ஆன்லைன் பிரச்சினையால் எம்பிபிஎஸ் வாய்ப்பு இழந்த மாணவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு: தமிழக அரசு வழங்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆன்லைன் பிரச்சினையால்   எம்பிபிஎஸ் வாய்ப்பு இழந்த மாணவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு: தமிழக அரசு வழங்க உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இணையதளப் பிரச்சினையால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்த மாணவருக்கு தமிழக அரசு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் நரிக்குடியைச் சேர்ந்தவர் கே.லால்பகதூர் சாஸ்திரி. இவர் நீட் தேர்வில் பெற்ற 409 மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் ஏதாவது ஒரு மருத்துவக்கல்லூரியில் நிர்வாக ஒதுக்கீட்டு இடத்தில் எம்பிபிஎஸ் இடம் ஒதுக்க அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அரசு சார்பில், தமிழகத்தில் எம்பிபிஎஸ் கலந்தாய்வு 28.4.2022-ல் முடிந்துவிட்டது. தற்போது எம்பிபிஎஸ் சீட் காலியாக இல்லை. இதனால் மனுதாரருக்கு சீட் வழங்க முடியாது என்று கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி இன்று பிறப்பித்த உத்தரவில், "மனுதாரரை நடப்பு கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர்க்குமாறு உத்தரவிட முடியாது. ஆன்லைன் பிரச்சினையால் மனுதாரருக்கு சீட் கிடைக்காமல் போயுள்ளது. மருத்துவ கலந்தாய்வு நடைமுறைகளை நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும் மேற்கொண்டிருந்தால் இதுபோன்ற பிரச்சினைகளைத் தவிர்த்திருக்கலாம். இணையதளத்தில் பதிவு செய்ய போதுமான கால அவகாசம் வழங்கியிருந்தாலும் பிரச்சினை வந்திருக்காது.

இதனால் எதிர்காலத்தில் மனுதாரர் சந்தித்தது போன்ற பிரச்சினைகள் வராமல் இருக்க மருத்துவ மாணவர் தேர்வு முறையை மாற்றியமைக்க வேண்டும். டிஜிட்டில் முறையில் ஏற்பட்ட தவறால் மாணவருக்கு பாதிப்பு ஏற்படும் போது அவருக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இதனால் மனுதாரருக்கு அரசு 8 வாரத்தில் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in