
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் குறுக்கே மாடுகள் விபத்துக்குள்ளாவது அதிகரிக்கவே, அவற்றை தவிர்க்கும் நோக்கில் ரயில்வே பாதுகாப்பு படை புதிய நடவடிக்கையை தொடங்கப்பட்டுள்ளது.
நாட்டின் அதிவேக ரயிலாகவும், உள்நாட்டின் கட்டமைப்பை பறைசாற்றும் வகையில் அறிமுகமானவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள். மத்திய பாஜக அரசின் சாதனையாகவும் இவை முன்னிறுத்தப்படுகின்றன. தேர்தல் மேகம் சூழ்ந்த குஜராத், இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விமரிசையாக அறிமுகம் செய்யப்பட்டன.
ஆனால், வந்தே பாரத் ரயில்கள் அறிமுகமான சில தினங்களிலேயே ரயில் தடங்களை குறுக்கிடும் மாடுகள் மீது மோதி விபத்துக்குள்ளாவது அதிகரித்தது. குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் இவற்றின் எண்ணிக்கை கூடியது. இந்த விபத்துகளில் உயிரிழக்கும் மாடுகள் மட்டுமன்றி ரயிலின் உறுதியற்ற முகப்பும் சர்ச்சைக்குள்ளானது.
இத்தோடு பாஜக அரசின் பெருமைக்குரிய ரயில் மோதி, மாடுகள் இறப்பது குறித்து சாமியார்கள் சிலர் விசனம் தெரிவித்தனர். குஜராத் தேர்தல் நெருங்குகையில் அங்கு மாடுகள் கொல்லப்படுவது அபசகுனம் என்றார்கள். விபத்துக்குள்ளான வந்தே பாரத் ரயில்களை உடனடியாக பழுதுபார்த்த ரயில்வே நிர்வாகம், ரயில் தடங்களை குறுக்கிடும் மாடுகளை விரட்ட வழி யோசித்தது.
அதன் அங்கமாக மகாராஷ்டிர மாநிலத்தி்ல் ரயில் தடங்களின் அருகே மாடு வளர்ப்பு அதிகமுள்ள கிராமங்களை கணக்கெடுத்து, அங்குள்ள மாடு உரிமையாளர்கள் மற்றும் மேய்ப்பர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அது மட்டுமன்றி கிராமத் தலைவர்களுக்கான கூட்டங்கள் நடத்தி, மாடுகள் பாதுகாப்பு மற்றும் அவை ரயில் தடங்களை தவிர்ப்பது குறித்தும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.
இறுதியாக குறிப்பிட்ட கிராமத்தின் ரயில் தடத்தில் மாடு மோதி வந்தே பாரத் ரயில் விபத்துக்குள்ளானால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கிராமத் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உரிய வழிகாட்டுதல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களும் கிராமங்களில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.