தமிழகத்தின் புதிய தொழில் முதலீட்டாளருக்கு அரசகுடும்ப கார்

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் யூசூப் அலி
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் யூசூப் அலி

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணத்தின் போது லூலூ மாலின் உரிமையாளர் யூசூப் அலியையும் சந்தித்தார். லூலூ குழுமம், தமிழகத்தில் 3500 கோடி அளவிற்கு தொழில் துவங்குவதற்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. லூலூ குழுமத்தின் உரிமையாளர் யூசூப் அலிக்கு, திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர்களின் வழித்தோன்றல்கள், தங்களது அரசகுடும்பத்தின் பாரம்பர்ய பெருமைமிக்க காரை பரிசாக அளிக்க உள்ளனர்.

யூசூப் அலியின் பூர்வீகம் கேரளம். கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த திருவிதாங்கூர் அரசகுடும்பமானது யூசூப் அலிக்கு, கடைசி மன்னரான உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவின் காரை பரிசாகக் கொடுக்க உள்ளது. இந்தக் கார் இப்போது திருவனந்தபுரம், பட்டம் பகுதியில் இருக்கும் அரண்மனையில் உள்ளது. 1955-ம் ஆண்டு ஜெர்மனி மெர்சிடைஸ் பென்ஸ் வகையைச் சேர்ந்த இந்த கார், மன்னருக்காக ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டதாகும். கடந்த 2012-ம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னரும், காரைப் பிரியப்பட்டு வாங்கியவருமான உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா வயது மூப்பின் காரணமாக உயிர் இழந்தார். அவரது மறைவுக்குப் பின்பு, ஸ்ரீ உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா அறக்கட்டளையின் கீழ் உள்ளது.

இந்தக் காரின் பழமைகருதி, இரண்டு புதிய கார்களைத் தருவதாகக்கூட சம்பந்தப்பட்ட கார் நிறுவனமே முன்வந்த போதும் அரசகுடும்பம் அந்தக் காரை வழங்கவில்லை. இந்நிலையில் யூசூப் அலிக்கும், தங்கள் குடும்பத்திற்கும் இடையே இருக்கும் உறவை பறைசாற்றும்வகையில் இந்த காரை அவருக்கு பரிசாகக் கொடுக்க உள்ளது அரசகுடும்பம். 1955 மாடலான இந்த கார், அன்றைய நாளில் கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்டு, 12 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டது. தனது 85-வது வயதுவரை இந்தக் காரை உத்திராடம் திருநாள் ஓட்டியிருக்கிறார். மொத்தம் 40 லட்சம் மைல் ஓடியிருக்கும் இந்தக் காரில் உத்திராடம் திருநாளே 23 லட்சம் கிலோ மீட்டர் தனிப்பட்டவகையில் ஓட்டியிருக்கிறார். அந்த அளவிற்கு இந்தக் காரோடு உத்திராடம் திருநாளுக்கு மிகப்பெரிய தொடர்பு இருந்தது.

நிறுவனம் நிர்ணயித்த இலக்கையும் தாண்டி அதிக தூரம் ஓடிய கார் என்பதால் காரைத் தயாரித்த நிறுவனமே பலமுறை அரசகுடும்பத்தை அணுகியது. இரண்டு புதிய மெர்சிடைஸ் பென்ஸ் காரை தருவதாகக் கூட அதிகாரிகள் கேட்டனர். ஆனால் இந்த கார் இப்போது தொழிலதிபர் யூசூப் அலிக்கு பரிசாக வழங்கப்பட உள்ளது. முன்னதாக கடந்த 2012-ம் ஆண்டு யூசுப் அலியும், உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மாவும் அரண்மனையில் சந்தித்துக்கொண்டனர். அப்போதே, யூசுப் அலிக்கு இந்தக் காரை தன் காலத்திற்கு பின்பு கொடுக்க முடிவெடுத்திருப்பதை அவரிடம் பகிர்ந்திருக்கிறார் உத்திராடம் திருநாள் மார்த்தாண்ட வர்மா. அதை இப்போது மன்னரின் வாரிசுகள் நிறைவேற்ற உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in