நீதிபதி முன்னே பிளேடால் கழுத்தை அறுத்த ரவுடி; பதறிய போலீஸ்: சென்னை நீதிமன்றத்தில் பரபரப்பு

ரவுடி சங்கர்
ரவுடி சங்கர்

நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான கைதி நீதிபதி முன்பே பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை அயனாவரம் வெள்ளாளர் தெருவை சேர்ந்த ரவுடி சங்கர் என்ற சங்கர்பாய் (28). இவரை கடந்த சில வாரங்களுக்கு முன்பு போலீஸார் கொள்ளை வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு கொளத்தூர் காவல் நிலையத்தில் ரவுடி சங்கர் மீதுள்ள கொள்ளை வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சங்கரை போலீஸார் சென்னைக்கு அழைத்து வந்து புழல் சிறையில் வைத்து விட்டு நேற்று மதியம் பலத்த பாதுகாப்புடன் வழக்கு விசாரணைக்காக எழும்பூர் 13-வது நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.

அப்போது, வழக்கை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். உடனே கைதி சங்கர் நீதிபதி முன்பே தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், கைதி சங்கரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சங்கருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர் நலமுடன் உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எழும்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை சங்கரிடம் நடத்தினர்.

விசாரணையில் கைதி சங்கரை போலீஸார் கோவை சிறையில் இருந்து சென்னைக்கு அழைத்து வரும் வழியில் செங்கல்பட்டு அருகே உணவு விடுதி ஒன்றில் உணவு அருந்த அழைத்து சென்ற போது அங்கிருந்து பிளேடை எடுத்து வந்த சங்கர், பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்ததால் ஆத்திரத்தில் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்துள்ளார்.

மேலும் காவல்துறையினர் தன் மீது பொய்யான வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், தன்னுடன் சிறைக்கு சென்ற கைதிகள் அனைவரும் பிணையில் வெளியே சென்று விட்ட நிலையில் தனக்கு மட்டும் நீதிமன்ற பிணை கிடைக்கவில்லை. கோவை சிறையில் தன்னை கொடுமைபடுத்துவதால் மீண்டும் தன்னை கோவை சிறையில் அடைத்தால், காவல்துறை வாகனத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன். இல்லையெனில் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வேன் என விசாரணையில் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் நீதிபதி் முன்பே கைதி் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in