`அவர் பெரிய அளவு குற்றம் செய்யவில்லை'- 5 கொலை வழக்கில் குண்டாஸ் போட்டதை எதிர்த்து ரவுடி ராக்கெட் ராஜா தரப்பு வாதம்

அறிவுரை கழகத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்ட ரவுடி ராக்கெட் ராஜா
அறிவுரை கழகத்தில் விசாரணைக்கு ஆஜர்படுத்தப்பட்ட ரவுடி ராக்கெட் ராஜா

பிரபல ரவுடி ராக்கெட் ராஜா அறிவுரை கழகத்தில் விசாரணைக்கு போலீஸார் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது ராக்கெட் ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குண்டர் சட்டம் போடும் அளவிற்கு பெரிய அளவு குற்றம் செய்யவில்லை என வாதிட்டார்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரவுடி ராக்கெட் ராஜாவை கடந்த அக்டோபர் மாதம் 7-ம் தேதி திருவனந்தபுரத்தில் வைத்து நெல்லை போலீஸார் கைது செய்தனர். கடந்த ஜூலை மாதம் மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமிதுரை என்பவரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் ராக்கெட் ராஜா கைது செய்தாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் ராக்கெட் ராஜா மீது 5 கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பதால், கடந்த அக்டோபர் மாதம் 11-ம் தேதி ராக்கெட் ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நெல்லை காவல் ஆணையர் உத்தரவிட்டதை அடுத்து ராக்கெட் ராஜா கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் ராக்கெட் ராஜா மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டம் தொடர்பான விசாரணைக்காக இன்று ராக்கெட் ராஜாவை சென்னை கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள அறிவுரை கழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்போடு அழைத்து வரப்பட்டு ஓய்வுபெற்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். இதற்கு முன்னதாக ராக்கெட் ராஜா மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான ஆதாரங்களை போலீஸார் அறிவுரை கழகத்தில் தாக்கல் செய்தனர். இதனை அடுத்து ராக்கெட் ராஜா மீது போடப்பட்ட குண்டர் சட்டம் செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை மேற்கொண்டார். அப்போது ராக்கெட் ராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குண்டர் சட்டம் போடும் அளவிற்கு பெரிய அளவு குற்றம் செய்யவில்லை எனவும் பொய்யான வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

இதனை தொடர்ந்து ராக்கெட் ராஜா மீது போடப்பட்டுள்ள குண்டர் சட்டம் குறித்து அறிவுரை கழகம் விரைவில் அறிவிக்கும் என தெரிகிறது. பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்போடு ராக்கெட் ராஜாவை போலீஸார் மீண்டும் கோவை சிறைக்கு அழைத்து சென்றனர். ராக்கெட் ராஜாவை அறிவுரை கழகத்தில் ஆஜர்படுத்துவதை அறிந்த பனங்காட்டு படை கட்சி தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர் அங்கு ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in