சூப் குடிக்கப்போன இடத்தில் தகராறு: உயிருக்குப் பயந்து ரவுடியை கொலைசெய்த கும்பல்

கொலை
கொலை குமரியில் ரவுடி கொலை: 5 பேரைப் பிடிக்க போலீஸார் தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு ரவுடி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளின் அடையாளம் தெரிந்தது. அவர்களைக் கைது செய்ய போலீஸார் தனிப்படை அமைத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், லாயம் அருகில் உள்ள அனந்த பத்மநாபபுரம், மேலத்தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(37). இவர் மீது மூன்று கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல்துறையின் ரவுடிப் பட்டியலிலும் இவர்பெயர் உள்ளது. நேற்று நள்ளிரவு லாயம்- சந்தைவிளை சாலையில் வந்து கொண்டிருந்தபோது மர்மக்கும்பலால் ராஜ்குமார் வெட்டிக் கொல்லப்பட்டார். குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் இந்த கொலைக்கான காரணம் இப்போது தெரியவந்துள்ளது.

ராஜ்குமார் சந்தைவிளை பகுதியில் உள்ள சூப் கடையில் நேற்று மாலை சூப் குடிக்கச் சென்றார். அப்போது சந்தைவிளை பகுதியைச் சேர்ந்த பிரவீன், முருகன் ஆகியோர் அங்கு சூப் குடித்துக்கொண்டு இருந்துள்ளனர். ராஜ்குமாருக்கும், அவர்களுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட, ராஜ்குமார் நான் யார் தெரியுமா? பெரிய ரவுடி என தன் கொலைப் பின்னணிகளை எடுத்துச்சொல்லி அச்சமூட்டியுள்ளார். இதனால் பயந்துபோன பிரவீனும், முருகன் எங்கே பெரிய ரவுடியான ராஜ்குமார் தங்களை கொலை செய்து விடுவாரோ எனப் பயந்து, தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஐந்து பேராக ராஜ்குமாரைக் கொலை செய்தது தெரியவந்தது. போலீஸார் ஐவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சூப் குடிக்கப் போன இடத்தில் ரவுடி தன் சுயபுராணத்தைச் சொல்லி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in