
சென்னையில் வீடு புகுந்து காதலி கண்முன்னே ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 7 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சென்னை எண்ணூர் வ.ஊ.சி நகர் 7-வது பிளாக்கை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜாக்கி என்ற ஜாகீர்உசேன்(32). எண்ணூர் காவல்நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது வழிப்பறி, கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வந்த ரவுடி ஜாகீருக்கு திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் ரவுடி ஜாகீருக்கு அதே பகுதியை சேர்ந்த செந்தாமரை என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். நேற்று இரவு பணிமுடிந்து வீடு திரும்பிய ரவுடி ஜாகீர், தனது காதலி செந்தாமரை மற்றும் அவரது குழந்தையுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவு வீட்டில் புகுந்த அடையாளம் தெரியாத 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று செந்தாமரை கண்முன்னே ரவுடி ஜாகீரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பி சென்றது. செந்தமாரை அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் உடனே எண்ணூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீஸார் ரவுடி ஜாகீர் உடலை கைப்பற்றி ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இக்கொலை சம்பவம் குறித்து எண்ணூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக ரவுடி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படைகள் அமைத்து கொலையாளிகள் தேடப்பட்டு வருகின்றனர். வீட்டில் புகுந்து ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.