கூட்டங்களுக்கு மத்தியில் ஓடஓட விரட்டிக்கொல்லப்பட்ட இளைஞர்: புதுச்சேரியில் மர்ம கும்பல் வெறிச்செயல்

கொலை செய்யப்பட்ட பிரவீன்
கொலை செய்யப்பட்ட பிரவீன்கூட்டங்களுக்கு மத்தியில் ஓடஓட விரட்டிக்கொல்லப்பட்ட இளைஞர்: புதுச்சேரியில் மர்ம கும்பல் வெறிச்செயல்

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பத்தில் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த  இளைஞர் ஒருவர்  மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தால் பெரும் பதற்றம் நிலவுகிறது.

புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் ஆர்.கே.நகர்  பகுதியை சேர்ந்தவர் சதாசிவம் மகன் பிரவீன் (19). மரம் வெட்டும் தொழில் செய்து வந்த இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு அரியாங்குப்பம்  ஜிம் பாண்டியன்  என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவனான பிரவீன்  கைது செய்யப்பட்டு அரியாங்குப்பம் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.  

அதிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த பிரவீன் கட்டப்பஞ்சாயத்து உட்பட பல்வேறு விவகாரங்களில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று  இரவு 9 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பிரவீனை  ஆர்.கே. நகர்  பெரியார் சிலை அருகில் ஒரு கும்பல் வழிமறித்தது. அவர்களைக் கண்டதும் வாகனத்திலிருந்து  இறங்கி அங்கிருந்து பிரவீன் தப்பி ஓடினார்.

அவரை விடாமல்  துரத்திச்சென்ற அந்த மர்ம கும்பல்  பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில் தலை, கழுத்து, கை, கால்களில் பலத்த காயம் அடைந்த பிரவீன் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.  பிரவீன் இறந்ததை உறுதி செய்தபின் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

இந்த படுகொலை பற்றி தகவல் அறிந்த புதுச்சேரி தெற்கு போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரவீன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது  குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள அரியாங்குப்பம் போலீஸார், பிரவீன் கொலைக்கான பின்னணி மற்றும் கொலையாளிகள் யார்  செய்தது யார்? என  விசாரணை நடத்தி வருகின்றனர்.  கடைத்தெருவில் மக்கள் மத்தியில் ஓட ஓட விரட்டி இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தால் புதுச்சேரியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in