
‘நான் இப்போ திருந்திட்டேன்..’ என்று தன்னிலை விளக்கமளித்து வீடியோ வெளியிட்ட ரவுடி பேபி தமன்னாவை இன்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கோவை கீரணத்தம் பகுதியை சேர்ந்த ரவுடி கோகுல் என்பவர் கோவை கோர்ட் அருகே கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இவர் கடந்த 2021ம் ஆண்டு ரத்தினபுரியை சேர்ந்த ரவுடி குரங்கு ஸ்ரீராம் என்பவர் கொல்லப்பட்ட வழக்கின் முக்கிய குற்றவாளி ஆவார். ஸ்ரீராம் கொலைக்கு பழிவாங்கலாகவே கோகுல் கொல்லப்பட்டிருக்கிறார் என காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.
கோகுல் கொலை விவகாரத்தில் குரங்கு ஸ்ரீராம் நண்பர் வட்டாரத்தின் முக்கிய நபர்களை போலீசார் குறிவைத்து விசாரிக்க ஆரம்பித்தனர். அதில் ரத்தினபுரியில் வசித்து வந்த தமன்னா என்கிற 23 வயது வினோதினி என்பவர் வெளிப்பட்டார். பின்னர் இவர் பீளமேடு பகுதியில், நண்பர் ஒருவருடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்ததாக கைதானார்.
சிறைக்கு சென்று ஜாமீனில் வந்த இவர், முன்பைவிட அதிகமான குற்றச்செயல்களில் ஈடுபட ஆரம்பித்தார். மேலும் ரவுடி குழுக்களுக்கு இடையிலான பகையை தூண்டும் வகையில் வீடியோக்களையும் வெளியிட்டு பதற்றத்தை உருவாக்கினார். இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் கத்தி கபடா என ஆயுதங்களுடன் தோன்றி ஆட்சேபகரமாக பேசி சிலருக்கு மிரட்டல் விடுக்கவும் செய்தார். இதில் போத்தனூரை சேர்ந்த ரவுடி ’விக்கு’ சண்முகம் என்பவருக்கு ஆதரவாக, தமன்னாவின் வீடியோக்கள் அமைந்திருந்தன.
இந்த வீடியோ வைரலானதில் தமன்னாவும் பிரபலமானார். தொடர்ந்து தமன்னாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. உடன் தமன்னா தலைமறைவாக, தமன்னாவின் நண்பர்களை போலீசார் அள்ளிவந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்க ஆரம்பித்தனர். இதனால் தமன்னாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. உடனே தன்னுடைய தரப்பை விளக்கி வீடியோ ஒன்றையும் வெளியிட்டார்.
’கத்தியுடன் தோன்றிய வீடியோ பழையது என்றும், இப்போது தான் திருந்தி, திருமணமாகி 6 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், போலீசார் தன்னை தேட வேண்டாம்’ என்றும் அதில் கோர் இருந்தார். அந்த வீடியோவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட தனிப்படையினர் சங்ககிரியில் பதுங்கியிருந்த வினோதினி எ ரவுடி பேபி தமன்னாவை இன்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் பெண்கள் சிறை பிரிவில் அடைக்கப்பட்டார்.