ரசிகர்களை நெகிழவைத்த ரோஜர் ஃபெடரர்; கண்கலங்கிய நண்பன் நடால்: உணர்ச்சிகர வீடியோ

ரசிகர்களை நெகிழவைத்த ரோஜர் ஃபெடரர்; கண்கலங்கிய நண்பன் நடால்: உணர்ச்சிகர வீடியோ

சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற மாஸ் டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் தனது ரசிகர்களின் அன்பால் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். இதனைப் பார்த்த அவரது நண்பர் நடாலும் கண்கலங்கினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கிராண்ட் ஸ்லாம் போட்டியில் 20 சாம்பியன் பட்டங்கள், 103 ஏடிபி தொடரில் சாம்பியன் பட்டங்கள், 6 ஏடிபி பட்டம், ஒரு டேவிஸ் கோப்பை, நம்பர் ஒன் வீரராக 310 வாரம், மாஸ்டர்ஸ் தொடர் பட்டத்தை 28 முறை வென்றது, 31 முறை கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியில் விளையாடியது போன்ற பல உலக சாதனைக்கு சொந்தக்காரர் ரோஜர் ஃபெடரர். இப்படி பல சாதனையை படைத்துள்ள 41 வயதான ரோஜர் ஃபெடரர் கடந்த சில நாட்களுக்கு முன்பு லேவர்ஸ் கோப்பை தொடர் தான் தமது கடைசி போட்டி என்று அறிவித்தார். இதனால் லேவேர்ஸ் கோப்பை மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்தது.

இந்நிலையில் தனது கடைசி ஆட்டத்தில் தனது நண்பரும் கடும் போட்டியாளருமான ரபேல் நடால் உடன் ரோஜர் ஃபெடரர் இணைந்து இரட்டையர் பிரிவில் விளையாடினார். சோக் மற்றும் டியோபி ஜோடியை எதிர்கொண்டு முதல் செட்டை ஃபெடரர், நடால் கூட்டணி வென்றது. இருப்பினும் அடுத்த மூன்று செட்களிலும் இளம் ஜோடியான சோக் மற்றும் டியோபி வென்றது. இதையடுத்து ரசிகர்களிடமிருந்து கண்ணீர் மல்க ரோஜர் ஃபெடரர் விடை பெற்றார். ஃபெடரர் விலகுவதை தாங்கிக்கொள்ள முடியாத நண்பர் ரஃபேல் நடாலும் அவருக்கு அருகில் அமர்ந்து கண்கலங்கினார். இதை பார்த்த ரசிகர்கள் நெகழ்ச்சி அடைந்தனர். இந்த வீடியோவை கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ``ஒரு அற்புதமான விளையாட்டு தருணம், அந்த அற்புதமான தருணங்களுக்கு நன்றி'' கூறியுள்ளார்.

ஓய்வு குறித்து ரோஜர் ஃபெடரர் கூறுகையில், "நிச்சயம் நான் மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன். சோகமாக இல்லை. உங்கள் முன் நிற்பதை பெருமையாக கருதுகிறேன். கடைசி போட்டியில் விளையாட முடிந்ததை நினைத்து சந்தோஷப்படுகிறேன். என்னுடைய டென்னிஸ் பயணம் மிக பிரமாதமான ஒன்று. இதை திருப்பி செய்யவும் நான் ஆசைப்படுகிறேன்" என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in