ரோபோ மூலம் பாதாள சாக்கடை சுத்தம்: வியப்பில் ஆழ்ந்த மத்திய அமைச்சர்

ரோபோ மூலம் பாதாள சாக்கடை சுத்தம்: வியப்பில் ஆழ்ந்த மத்திய அமைச்சர்

மனிதர்களை ஈடுபடுத்தாமல் இயந்திரம் மூலம் பணிகளை மேற்கொள்ளும் மாநகராட்சி நிர்வாக நடவடிக்கைகளை மத்திய இணை அமைச்சர் பாராட்டினார்.

கோவை மாநகராட்சி காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே ரோபோ மூலம் பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யும் பணியை மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சர் நாராயணசாமி ஆய்வு செய்தார். கோவை மாநகராட்சி நிர்வாக எல்லைக்குள் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு 600 கிமீ தூரத்துக்குமேல் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பாதாள சாக்கடை அடைப்புகளை சரி செய்யவும், மனிதக் கழிவுகளை அகற்றவும் தனியார் நிறுவனத்தினரால் ரோபோ இயந்திரம் தயாரிக்கப்பட்டன.

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் 36 லட்சம் மதிப்புள்ள ரோபோ இயந்திரம் தனியார் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, கோவை மாநகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. கோவை உப்பிலிபாளையம் சிக்னல் அருகே பாதாள சாக்கடை அடைப்புகளை சரிசெய்ய இந்த ரோபோ இயந்திரம் முதல்முறையாக பயன்படுத்தப்பட்டது.

இதனிடையே பாரத் பெட்ரோலியம் நிறுவனம் சார்பில் 2.12 கோடியில் பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றுவதற்காக 5 நவீன ரோபோக்கள் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டன. தற்போது இந்த ரோபோக்கள் அனைத்தும் தங்களது பணிகளை தொடங்கி சிறப்பாக செய்து வருகின்றன. இதனிடையே கோவைக்கு இன்று வந்த மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி இந்த ரோபோ பணிகளை ஆய்வு செய்தார்.

பாதாள சாக்கடை பராமரிப்பு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை அமைச்சர் வழங்கினார். ரோபோ மூலம் பாதாள சாக்கடை சுத்தம் செய்யப்படுவதை ஆர்வமுடன் பார்த்து அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.

மனிதர்களை ஈடுபடுத்தாமல் இயந்திரங்கள் மூலம் பாதாள சாக்கடை சுத்தம் செய்யும் பணியை மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது என பாராட்டினார். கலெக்டர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப், முதுநிலை வருமானவரித்துறை ஆணையர் பூபால் ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in