ஊழியர்கள் சுற்றி நிற்கும்போதே நூதனக்கொள்ளை: அதிர்ந்து போன டைல்ஸ் கடைக்காரர்

சித்தரிக்கப்பட்ட படம்
சித்தரிக்கப்பட்ட படம்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊழியர்கள் ஏராளமானோர் இருக்கும்போதே டைல்ஸ் கடையில் வாடிக்கையாளர் போல் வந்து நூதனமுறையில் கொள்ளையடித்துச் சென்ற வாலிபரை போலீஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், புதுகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் தூத்துக்குடி- திருநெல்வேலி பிரதான சாலையில் சொந்தமாக டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் பத்துக்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்தக் கடையில் தினமும் லட்சக்கணக்கில் வியாபாரமும் நடக்கும். இந்தக் கடையில் நேற்றும் ஏராளமான வாடிக்கையாளர்கள் வந்திருந்தனர். அவர்களுக்கு கடையின் ஊழியர்கள் டைல்ஸைக் காட்டிக் கொண்டு இருந்தனர்.

வியாபாரமெல்லாம் முடிந்து இரவு கல்லாப் பெட்டியில் பணத்தை எண்ணிப் பார்க்கும்போது இரண்டே கால் லட்சம் ரூபாய் மாயமாகி இருந்தது தெரியவந்தது. உடனே விக்னேஷ் தன் கடையில் பொருத்தப்பட்டு இருக்கும் சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தார்.அப்போது கடையில் டைல்ஸ் வாங்குவது போல் வந்த வாடிக்கையாளர் ஒருவர் யாரும் பார்க்காத நேரத்தில் கல்லாப் பெட்டியில் கைவிட்டு பணத்தை எடுத்துச் சென்றிருப்பது பதிவாகி இருந்தது. இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் விக்னேஷ் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் குற்றவாளியைத் தேடிவருகின்றனர்.

பட்டப் பகலில், கடையில் பத்துக்கும் அதிகமான ஊழியர்கள் இருக்கும்போதே நூதனமுறையில் நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in