
திண்டுக்கல் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் கொள்ளையடித்து விட்டு கேரளாவில் பதுங்கியிருந்த குற்றவாளிகளை போலீஸார் விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் சாலையூர் நான்கு ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஆவார். கடந்த டிச. 26-ம் தேதி இவரது வீட்டில் 43 பவுன் நகை, 18 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வேடசந்தூர் போலீஸார் தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
கரூர், நாமக்கல், ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் 10க்கும் மேற்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் ஆலப்புழா கரீம், கொல்லம் கணேஷ்குமார், திருவனந்தபுரம் சுதீஷ், கண்ணனூர் கிரீஷ், பட்டுக்கோட்டை பாலசுப்ரமணி ஆகியோர் கேரளாவில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து வேடசந்தூர் டிஎஸ்பி துர்காதேவி தலைமையில் தனிப்படையினர் கேரளா விரைந்தனர். அங்கு பல்வேறு இடங்களில் தேடிச் சென்று கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 10 பவுன் நகை, 79 ஆயிரம் ரொக்கம், கொள்ளையடித்து விட்டு தப்பிச் செல்ல பயன்படுத்திய சொகுசு கார், கொள்ளைக்கு பயன்படுத்திய பொருட்கள் ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.