என்.ஐ.ஏ போல் நடித்து 20 லட்சம் கொள்ளை; செல்போன் சிக்னலை பார்த்து துரத்திய போலீஸ்: பாஜக நிர்வாகி உள்பட 6 பேர் சரண்

என்.ஐ.ஏ போல் நடித்து 20 லட்சம் கொள்ளை; செல்போன் சிக்னலை பார்த்து துரத்திய போலீஸ்: பாஜக நிர்வாகி உள்பட 6 பேர் சரண்

என்.ஐ.ஏ அதிகாரிகள் போல் நடித்து செல்போன் கடை உரிமையாளர் வீடு மற்றும் கடையில் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் கொள்ளையடித்த வழக்கில் பாஜக நிர்வாகி உட்பட 6 பேர் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

சென்னை முத்தியால்பேட்டை மலையப்பன் தெருவை சேர்ந்த ஜமால் தனது சகோதரர்களுடன் சேர்ந்து பர்மா பஜார் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி ஜமால் வீட்டிற்கு வந்த ஒரு கும்பல் தங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக்கொண்டு கோவை குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பாக சோதனை நடத்து வந்துள்ளதாக கூறி செல்போன்களை வாங்கி வைத்துக்கொண்டு சோதனை நடத்தினர். பின்னர் அதே கும்பல், பர்மா பஜாரில் உள்ள ஜமாலின் கடையிலும் சோதனை நடத்தி, வீடு மற்றும் கடையில் இருந்து சுமார் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். பின்னர் ஜமாலுக்கு தனது வீட்டில் என்ஐஏ பெயரில் சோதனை நடத்திய கும்பல் போலி என தெரியவந்ததை அடுத்து முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் முத்தியால்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடங்களில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளைக் கைப்பற்றி 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.

இந்த நிலையில், ராயபுரத்தைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகியான வேலு (எ) வேங்கை அமரன், கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த கேஸ் டெலிவரி பாய் புஷ்பராஜ், வீரா (எ) விஜயகுமார், பல்லவன் சாலையை சேர்ந்த கார்த்திக், பல்லவன் சாலை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் தேவராஜ் மற்றும் ரவி ஆகிய 6 பேர் இன்று ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். முன்னதாக போலீஸார் நடத்திய விசாரணையில் கொள்ளையர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களின் செல்போன் சிக்னல்களை கண்காணித்தபோது 6 பேரும் காரில் ஊட்டிக்கு சென்றது தெரியவந்தது.

அதனடிப்படையில் தனிப்படையினர் ஊட்டிக்கு விரைந்த நிலையில், அந்த தகவல் அறிந்த 6 பேரும் செல்போன்களை சுவிட்ஆப் செய்து விட்டு, ஊட்டியில் இருந்து பேருந்து மூலம் கோவைக்கு வந்து அங்கிருந்து சேலம் வழியாக பழனிக்குச் சென்று தலைமறைவானது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் பழனி விரைந்த நிலையில், போலீஸில் சிக்கி விடுவோம் என்ற அச்சத்தில் 6 பேரும் பழனியில் இருந்து வந்து இன்று சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், சரணடைந்த 6 பேரும் கிண்டி ரேஸ் கோர்ஸில் குதிரை பந்தயம் கட்டுபவர்கள் என்றும், பந்தயத்தில் தோற்றதால் நஷ்டம் ஏற்பட்டு, செய்வதறியாது திகைத்து நின்ற நேரத்தில் இந்த கும்பலைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகியான வேலு (எ) வேங்கை அமரன் செல்போன் கடை உரிமையாளர் ஜமாலிடம் பணம் அதிகம் இருக்கும் தகவல் அறிந்து கொண்டு கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளை திட்டம் தீட்டியது தெரியவந்தது. மேலும் நீதிமன்றத்தில் சரணடைந்த 6 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நாளை மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், 2 கோடி ரூபாய் கொள்ளை போனதாக புதிய தகவல் கிடைத்துள்ளதால் அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்திய பிறகே முழு விவரம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in