பக்கத்து வீட்டுக்குச் சென்று வருவதற்குள் கொள்ளை: குப்பை சேகரிக்க வந்த தம்பதி கைவரிசை

கைது
கைதுபக்கத்து வீட்டிற்கு சென்று வருவதற்குள் கொள்ளை: குப்பை சேகரிக்க வந்த தம்பதி உள்பட 4 பேர் கைது

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பில் பக்கத்து வீட்டிற்குச் சென்று திரும்புவதற்குள் கொள்ளை போன சம்பவத்தில் அந்த வழியாக குப்பை சேகரிக்கச் சென்ற தம்பதி உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், மூன்றடைப்பு அருகே உள்ள கோவைகுளம், வடக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பையா. விவசாயியாக உள்ளார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. சுப்பையா வழக்கம் போல் விவசாய வேலைகளில் ஈடுபட தன் வயலுக்குச் சென்று இருந்தார். இவரது மனைவி தன் வீட்டின் முன்பக்க கதவைப் பூட்டுப் போட்டு பூட்டிவிட்டு கடந்த 1ம் தேதி, பக்கத்து வீட்டில் போய் பேசச் சென்று இருந்தார். ஆனால் அவர் பின்பக்க கதவை தாழ்ப்பாள் போட்டுப் பூட்ட மறந்துவிட்டார்.

பக்கத்து வீட்டில் இருந்து பேசி முடித்து திரும்பியவர், வீட்டின் முன்பக்க கதவைத் திறந்து உள்ளே வந்தபோது அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் பீரோ திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த வளையல், கம்மல் உள்ளிட்ட 16 பவுன் தங்க நகைகளும், வீட்டில் இருந்த 5000 ரூபாய் மதிப்புள்ள செல்போனும் திருடு போயிருந்தது. உடனே இதுகுறித்து மூன்றடைப்பு போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்டனர்.

சுப்பையா வயலுக்குச் சென்று இருப்பதையும், கிருஷ்ணவேணி பக்கத்து வீட்டிற்கு பேசச் சென்று இருப்பதையும் நோட்டமிட்டு உள்ளூர் கொள்ளையர்கள் யாரேனும் கைவரிசைக் காட்டியிருக்கலாம் என்னும் கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இவ்விவகாரத்தில் தொடர்புடைய 4 பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.

இதில் களக்காடு ஜேஜே நகர் பகுதியைச் சேர்ந்த கசமுத்து, அவரது மனைவி சாந்தி(50), அவர்களது உறவினர் துரை(45), 14 வயது சிறுவன் ஆகியோர் மூன்றடைப்பு, கோவைகுளம் பகுதியில் பழைய பொருள்கள், குப்பைகளைச் சேகரிக்கச் சென்றனர். அப்போது அவர்கள் சுப்பையாவின் வீடு முன்பக்கம் பூட்டியும், பின்பக்கம் திறந்தும் இருப்பதைப் பார்த்தனர். பின்பக்க வாசல் வழியே உள்ளே சென்றபோது வீட்டின் பீரோ சாவி, பீரோவிலேயே இருந்ததால் திறந்து கொள்ளையடித்துள்ளனர். குப்பை சேகரிக்க வந்த குடும்பம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in