வீடு முழுவதும் மிளகாய்ப் பொடி; போலீஸுக்கு சவால் விடுத்துச்சென்ற கொள்ளையர்கள்: ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அதிர்ச்சி

வீடு முழுவதும் மிளகாய்ப் பொடி; போலீஸுக்கு சவால் விடுத்துச்சென்ற கொள்ளையர்கள்: ஓய்வுபெற்ற ராணுவ வீரர் அதிர்ச்சி
Updated on
1 min read

நெல்லையில் ஓய்வுபெற்ற ராணுவ வீரரும், வழக்கறிஞருமான செல்லத்துரை என்பவர் வீட்டில் மர்மநபர்கள் புகுந்து 70 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி, குலவணிகர்புரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்லத்துரை(60). ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொடர்ந்து ஓய்வுக்குப் பின்பு சட்டம் படித்து திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இருவரும் திருமணம் முடிந்து சென்னையில் உள்ளனர். செல்லத்துரை மற்றும் அவரது மனைவி ராமலெட்சுமி ஆகியோர் சென்னையில் உள்ள தங்கள் பிள்ளைகளின் வீடுகளுக்குச் சென்று இருந்தனர்.

இந்தநிலையில் அங்கிருந்து திருப்பதிக்குச் சென்று தரிசித்துவிட்டு நேற்று மாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. பொருட்களும் சிதறிக் கிடந்தன. உள்ளே சென்றுப் பார்த்தபோது பீரோவில் இருந்த 70 பவுன் நகைகள், 1.94 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. வீட்டில் மோப்பநாயை அழைத்து வந்து போலீஸார் சோதனை செய்வர் என்பதை யூகித்த கொள்ளையர்கள் வீடு முழுவதும் மிளகாய்ப் பொடியையும் தூவிச் சென்றுள்ளனர். கொள்ளை போனப் பொருள்களின் மொத்த மதிப்பு 30 லட்சம் ஆகும். இதேபோல் செல்லத்துரை வீட்டின் எதிர்வீட்டிலும் ஆள் இல்லை. ஆசிரியர் மகாராஜன் குடும்ப உறவினர் விசேஷத்திற்குச் சென்று இருந்தார். அவரது வீட்டையும் உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 800 ரூபாயைத் திருடிச் சென்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in