பாதுகாப்பு கெடுபிடி மிக்க கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரி வீட்டில் கொள்ளை: போலீஸார் அதிர்ச்சி

கூடங்குளம் அணுஉலை
கூடங்குளம் அணுஉலைhindu

கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரி வீடு புகுந்து 60 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். முழுக்க அணுமின் நிலைய காவலர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தப் பகுதியில் கொள்ளை போன சம்பவம் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிசெய்யும் அதிகாரிகளுக்கு அணு விஜய் குடியிருப்பு என்னும் பிரத்யேகமாக அரசால் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்திலேயே கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அறிவியல் பிரிவு அதிகாரி அசோகன்(55) என்பவரது இல்லம் உள்ளது. இங்கு இவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

அண்மையில் அசோகன் கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணுமின் நிலையத்திற்கு மாற்றலானார். இதனால் இங்கிருக்கும் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு அங்கு சென்றிருந்தார். இந்நிலையில் கூடங்குளம் குடியிருப்பில் புகுந்த மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து 60 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர். கொள்ளை போயிருக்கும் குடியிருப்புப் பகுதி முழுவதும் அணுமின் நிலைய பாதுகாப்பு ஊழியர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியாகும். இங்கு அவ்வளவு சீக்கிரம் வெளிநபர்கள் உள்ளே வர முடியாது. இதனால் கூடங்குளம் போலீஸார் கொள்ளை போன வீட்டில் கிடைத்த கைரேகையை வைத்துக்கொண்டு, அதே குடியிருப்பில் வசிக்கும் மக்களின் கைரேகையையும் ஒத்துப் பார்க்கும் முடிவில் உள்ளனர்.

கூடங்குளம் ஊழியர் குடியிருப்பில் நடந்த இந்தத் கொள்ளைச் சம்பவம் குடியிருப்புவாசிகள் மத்தியிலும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in