மூன்றாவது கண்ணுக்கு முத்தம்: போலீஸாருக்கு சவால் விட்ட கொள்ளையர்கள்

மூன்றாவது கண்ணுக்கு முத்தம்: போலீஸாருக்கு சவால் விட்ட கொள்ளையர்கள்

சென்னையில் கொள்ளையடிக்க வந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமிராவிற்கு முகத்தை காட்டி முத்தம் கொடுத்து விட்டுச் சென்ற கொள்ளையர்களின் செயலால் போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னை மடிப்பாக்கம் மற்றும் உள்ளகரம் பகுதியில் டூவீலர் மற்றும் சைக்கிள்கள் அடிக்கடி திருடு போனது. இதனால் அப்பகுதியில் சிசிடிவி கேமராக்களைப் பொதுமக்கள் பொருத்தியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மடிப்பாக்கம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கொள்ளையடிக்க மர்மக்கும்பல் வந்தது. அப்போது அங்கிருந்த சிசிடிவி கேமராவிற்கு அந்த கும்பல் முத்தம் கொடுத்தது.

இந்த காட்சியை காலையில் பார்த்த குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அந்த காட்சியை மடிப்பாக்கம் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். கொள்ளயைடிக்க வரும் போது முகத்தில் முகமூடி, மாஸ்க், ஹெல்மெட், கர்ச்சீப் போன்றவற்றைக் கொண்டு மறைத்து வரும் கொள்ளையர்கள் மத்தியில், தைரியமாக போலீஸாருக்கு முகத்தைக் காட்டும் வகையில் சிசிடிவிக்கு முத்தம் கொடுத்த கொள்ளையர்களின் செயல் மடிப்பாக்கம் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் சிசிடிவி கேமராவிற்கு முத்தம் கொடுத்த அவர்களின் அடையாளங்களை வைத்து போலீஸார் தேடி வருகின்றனர்.

கொள்ளையடிக்க வந்த இடத்தில் கொள்ளையர்கள் சிசிடிவிக்கு முத்தம் கொடுத்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in