வடமாநிலம் சென்ற கொள்ளையர்கள்; 22 நாட்களாக பின் தொடர்ந்த தனிப்படை: புதுச்சேரியில் கொத்தாக தூக்கியது போலீஸ்

கொள்ளையடிக்கப்பட்ட நகைக்கடை
கொள்ளையடிக்கப்பட்ட நகைக்கடை

கள்ளக்குறிச்சி அருகே நகைக்கடையின் பூட்டை உடைத்து 2 கிலோ தங்கம், 22 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை போன வழக்கில் வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, ஒன்றரை கிலோ தங்க நகைகள், 17 கிலோ வெள்ளி நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி அருகே புக்கிரவாரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ குமரன் ஸ்வர்ண மஹால் நகைக்கடையின் பூட்டை உடைத்து கடந்த மாதம் 7-ம் தேதின்று 2 கிலோ தங்கம், 22 கிலோ வெள்ளி பொருட்கள், 45 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர், கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், உட்கோட்ட சிறப்பு குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படை அமைத்தனர்.

அக்கம் பக்கத்தில் பதிவான சி.சி.டிவி பதிவுகள் மூலம் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது நான்கு பேர் என கண்டறிந்த தனிப்படை போலீஸார் அவர்கள் வந்த வாகனம் புதுச்சேரியில் வாடகைக்கு பெறப்பட்டது என்பதையும் கண்டறிந்தனர். வாடகை வாகன கடை பதிவேட்டின்படி, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை போலீஸார் கண்டறிந்தனர்.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தை சேர்ந்த அம்பி கிராமம் லாலா பூலா ரத்தோட் (53), தக்காவி கிராமத்தை சேர்ந்த குலாப்சிங் ரத்தோட் மகன் ராமதாஸ் குலாப்சிங் ரத்தோட், மாலுவாலு கிராமத்தை சேர்ந்த அஜய் பகவான் நானாவத் (45), தக்காவே கிராமத்தை சேர்ந்த சர்ணால் மத்யா நானாவத் (58) என்பதும், அவர்கள் குடும்பத்துடன் புதுச்சேரியில் தங்கியிருந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

நகைகளை கொள்ளையடித்து சென்றவர்கள் நாங்கள் மாட்டிக் கொள்ளாமல் கொள்ளையடித்ததற்காக இறைவனுக்கு நன்றி சொல்லும் விதமாக குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்று மொட்டை அடித்துக் கொண்டிருக்கின்றனர். அதன்பின்னர் குடும்பத்தினரை சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு வேறு மாநிலத்தில் தங்கள் கைவரிசை காட்டுவதற்காக சென்றுவிட்டனர். இதனை அவர்களின் செல்போன் நடமாட்டம் மூலமாக போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

மகாராஷ்டிரா, குஜராத், அகமதாபாத் ஆகிய பகுதிகளுக்கு அவர்கள் சென்றதையடுத்து தனிப்படை போலீஸார் அவர்களை பின்தொடர்ந்து சென்றனர். இப்படியே 22 நாட்களாக அவர்களை பின்தொடர்ந்து சென்ற நிலையில் அவர்கள் மீண்டும் நேற்று புதுச்சேரிக்கே வந்தனர். அதனை அடுத்து அங்கு விரைந்த தனிப்படை போலீஸார், புதுச்சேரி ஒயிட் டவுன் பகுதியில் தங்கியிருந்த லாலா பூலா ரத்தோட், சர்ணால் மத்யா நானாவத், அஜய் பகவான் நானாவத் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 1.5 கிலோ தங்க நகைகள் , 17 கிலோ வெள்ளி நகைகளை மீட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் புதுச்சேரியில் உள்ள ஒரு நகைக்கடையில் அவர்கள் 20 கிராம் நகையை விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்ததையடுத்து அதையும் மீட்டனர். தலைமறைவாக உள்ள மற்றும் ஒரு குற்றவாளியான ராமதாஸ் குலாப்சிங் ரத்தோட்டை விரைவில் கைது செய்து, அவரிடமிருந்து மீதமுள்ள நகைகளும் மீட்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கொள்ளையர்களை கைது செய்து, நகைகளை மீட்ட தனிப்படை போலீஸாரை கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., புகழேந்திகணேஷ், எஸ்.பி. பகலவன் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in