திருடிய பணத்தில் மது வாங்கி குடித்து ஜாலி: போதையில் ரயில் நிலையத்தில் தூங்கிய கொள்ளையர்கள் சிக்கினர்

திருடிய பணத்தில் மது வாங்கி குடித்து ஜாலி: போதையில் ரயில் நிலையத்தில் தூங்கிய கொள்ளையர்கள் சிக்கினர்

வீடு புகுந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து மதுவாங்கி குடித்துவிட்டு ரயில் நிலையத்தில் தூங்கிய கொள்ளையர்கள் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கடந்த 26-ம் தேதி இரவு ரயில்வே போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அளவுக்கதிகமான மதுபோதையில் இருவர் தூங்கி கொண்டிருப்பதை கண்ட போலீஸார், அவர்களை பிடித்து விசாரணை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த போலீஸார் அவர்களது உடமைகளை சோதனை செய்த போது, நகைகள் மற்றும் பணம் இருப்பதை கண்டு சந்தேகமடைந்து கிடுக்குபிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல சுவாரசியமான தகவல் வெளியானது. அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்த பெயின்டர் சையது அப்துல் கரிம்(37) மற்றும் பாடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் குமார்(29). இருவரும் பகல் நேரத்தில் பெயின்டர் மற்றும் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றிவிட்டு இரவு நேரத்தில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதேபோல கடந்த 19-ம் தேதி தி.நகர் நடேசன் தெருவை சேர்ந்த நகை வியாபாரி கணேஷ் பாபு(57) என்பவரது வீட்டை நோட்டமிட்டு, அவரது வீட்டு பீரோவிலிருந்த 7 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடியது விசாரணையில் தெரியவந்தது.

பின்னர் கொள்ளையடித்த நகையை விற்பனை செய்தால் போலீஸில் சிக்கி கொள்வோம் என்று எண்ணி, கொள்ளையடித்த பணத்தில் மது மற்றும் கஞ்சா இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் அளவுக்கதிகமான மதுபோதையில் எழும்பூர் ரயில் நிலையத்தில் படுத்து உறங்கிய போது, ரயில்வே போலீஸாரிடம் சிக்கினர். இவர்கள் மீது கொரட்டூர், கொளத்தூர், நொளம்பூர், நீலாங்கரை ஆகிய காவல் நிலையங்களில் 5க்கும் மேற்பட்ட கொள்ளை, பறிப்பு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து கொள்ளை வழக்கில் தி.நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவான முக அடையாளங்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பிடிப்பட்ட கொள்ளையர்களை தி.நகர் போலீஸாரிடம் ரயில்வே போலீஸார் ஒப்படைத்தனர். பின்னர் அவர்களிடமிருந்த நகைகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்து பின்னர் இருவரையும் போலீஸார் சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in