காவல் துறை அதிகாரியைக் கத்தியால் குத்திக்கொன்ற கொள்ளையன்: வழிப்பறி வழக்கில் கைது செய்த போது ஆத்திரம்

கொலை செய்யப்பட்ட ஏஎஸ்ஐ ஷம்பு தயாள்
கொலை செய்யப்பட்ட ஏஎஸ்ஐ ஷம்பு தயாள்

பெண்ணிடம் செல்போனை வழிப்பறி செய்த கொள்ளையனைக் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்ற ஏஎஸ்ஐ கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் கியாலா காவல் நிலையத்திற்குட்ட மாயாபுரி பகுதியில் வந்தனா என்ற இளம்பெண் தன் கணவரோடு ஜன.4-ம் கடைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு கொள்ளையன், வந்தனாவின் கையில் இருந்த செல்போனை பறித்துச் சென்றார். இச்சம்பவம் குறித்து வந்தனா காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து செல்போனை பறித்துச் சென்ற வாலிபரைத் தேடினர். அப்போது ஏஎஸ்ஐ ஷம்பு தயாள் என்ற காவல் அதிகாரி, வந்தனாவின் செல்போனைப் பறித்துச் சென்ற அனீஷ் என்ற கொள்ளையனை கைது செய்தார். அவரை காவல் நிலையத்திற்கு அவர் அழைத்துச் சென்றார்.

அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், சட்டைக்குள்மறைத்து வைத்திருந்த கத்தியால் ஏஎஸ்ஐ ஷம்பு தயாளை அனீஷ் சரமாரியாக குத்தினார். இதில் அவர் படுகாயமடைந்தார். ஆனாலும், அனீஷை தப்பிச்செல்ல முடியாமல் அவர் பிடித்துக் கொண்டார். இதைக்கண்ட பொதுமக்கள், காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் ஷம்பு தயாள் சிகிச்சை பெற்ற போது.
மருத்துவமனையில் ஷம்பு தயாள் சிகிச்சை பெற்ற போது.

போலீஸார் விரைந்து வந்து ஏஎஸ்ஐ ஷம்பு தயாளை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்தனர். அத்துடன் அனீஷை கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏஎஸ்ஐ ஷம்பு தயாள் நேற்று இரவு உயிரிழந்தார். இதையடுத்து இவ்வழக்கை கொலைவழக்காக மாற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் முன்னிலையில் ஏஎஸ்ஐயை கொள்ளையன் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் டெல்லி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in