பாதாளச் சாக்கடைப் பணிகளால் புதையும் வாகனங்கள் : திணறும் மதுரை மாநகராட்சி!

பாதாளச் சாக்கடைப் பணிகளால் புதையும் வாகனங்கள் : திணறும் மதுரை மாநகராட்சி!

மதுரை மாநகராட்சியில் பாதாளச் சாக்கடைப் பணிகள் முடிந்த சாலைகளை முறையாகச் சரிசெய்யாததால் அந்த சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி வாகனங்கள் மண்ணுக்குள் புதையும் சம்பவங்கள் நடைபெறுவதால், பாதாளச் சாக்கடையும் சேதமடைந்து, மாநகராட்சிக்கு இரட்டிப்பு செலவு ஏற்படுகிறது.

மதுரை மாநகராட்சியில் புறநகர் வார்டுகளில் ரூ.274 கோடியில் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியின் போது சாலைகளுக்கு நடுவில் குழி தோண்டி குழாய்கள், பாதாளச் சாக்கடை தொட்டிகள் அமைத்து வருகின்றனர். இப்பணிகள் முடிவடைந்த நிலையில் சாலைகள் பழையபடி சீரமைக்கப்படவில்லை. தோண்டிய குழிகளை மட்டும் மண்ணைப்போட்டு மூடிச் செல்கின்றனர்.

அந்த சாலைகள் தற்போது குண்டும், குழியுமாக உள்ளதால், மக்கள் நடமாட முடியவில்லை. சில தார்ச்சாலைகள் நடுவில் தோண்டிய குழியில் மட்டும் மண் கீழே இறங்கியுள்ளது. பாதாளச் சாக்கடைப் பணியால் புறநகர் வார்டுகளில் உள்ள அனைத்து சாலைகளும் முழுமையாகச் சேதமடைந்துள்ளன.

இந்த சாலைகளைப் புதிதாக அமைத்தால் மட்டுமே மக்கள், வாகன ஒட்டிகள் பயன்படுத்த முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சியில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதிய சாலைகள் அமைப்பதற்கு மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து மானிய நிதி உதவிகள் வரவில்லை. மாநகராட்சி சார்பில் வரிகள் உயர்த்தப்பட்டாலும், சிறப்பு நிதி வந்தால் மட்டுமே பாதாளச்சாக்கடை திட்டத்திற்காகச் சேதப்படுத்தப்பட்ட சாலைகளை மாநகராட்சியால் சீரமைக்க முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ராஜதுரைவேல் பாண்டியன் கூறுகையில், ‘‘மாநகராட்சியில் நடக்கும் எந்த ஒரு பணியும் அதிகாரிகள் மேற்பார்வையில் நடப்பதில்லை. அதனால், பாதாளச்சாக்கடை பணியின் தரமும், அதனால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் அதிகாரிகளுக்குத் தெரியவே இல்லை. சாலைகள் சேறும், சகதியுமாக இருப்பதால் மழை பெய்தாலே வாகனங்களை எடுக்க முடியவில்லை. கனரக வாகனங்களும் சிக்கி பாதாளச்சாக்கடை சேதமடைகிறது. ’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in