திறக்கப்பட்ட 4 மாதத்திலேயே பள்ளம் விழுந்த சாலை: பெங்களூரு மக்கள் அதிர்ச்சி - பாஜகவை குற்றம் சாட்டும் காங்கிரஸ்

திறக்கப்பட்ட 4 மாதத்திலேயே பள்ளம் விழுந்த சாலை: பெங்களூரு மக்கள் அதிர்ச்சி - பாஜகவை குற்றம் சாட்டும் காங்கிரஸ்

பெங்களூருவில் ரூ.19.5 கோடி செலவில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட சர்வீஸ் சாலையில், திறக்கப்பட்ட நான்கு மாதங்களிலேயே பள்ளம் விழுந்தததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பெங்களூருவின் கிழக்கு புறநகர் பகுதிகளை மற்ற பகுதிகளுடன் இணைக்கும் குண்டலஹள்ளி சுரங்கப்பாதையில் உள்ள இணைப்புச்சாலையில் திறக்கப்பட்ட 4 மாதங்களிலேயே பள்ளம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையில் குழாய் உடைந்து தண்ணீர் உள்ளே புகுந்ததால்தான் சாலையில் பள்ளம் விழுந்துள்ளது என சாலை பராமரிப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தால் இந்த குழாய் உடைப்பு தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. இந்த உடைப்பு காரணமாக பெங்களூருவின் சில பகுதிகளில் 24 மணி நேரம் வரை காவிரி நதிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

பள்ளம் விழுந்த சுரங்கப்பாதை சாலையை சரி செய்ய இன்னும் சில நாட்கள் ஆகும். வருடாந்திர பராமரிப்பு மற்றும் குறைபாடு பொறுப்பு பிரிவின் கீழ் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட பாதிப்பினை ஒப்பந்ததாரர் இலவசமாக சீர் செய்ய வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் நாகராஜ் யாதவ், " திறக்கப்பட்ட நான்கு மாதத்தில் சாலையில் பள்ளம் விழுந்துள்ளது கர்நாடக அரசின் 40 சதவீத ஊழலுக்கு மற்றொரு உதாரணம். இதற்கு காரணமான ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். முதல்வர் பசவராஜ் பொம்மைதானே பெங்களூரு அமைச்சராக இருக்கிறார், அவர் தனது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறிவிட்டார்" என தெரிவித்தார்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in