வேங்கைவயல் குடிநீர் தொட்டியை இடித்து தள்ளுங்கள்: சாலை மறியல் செய்த ஜனநாயக வாலிபர் சங்கம்

வேங்கைவயல் குடிநீர் தொட்டியை இடித்து தள்ளுங்கள்: சாலை மறியல் செய்த ஜனநாயக வாலிபர் சங்கம்

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயலில் மனித கழிவு கலக்கப்பட்ட குடிநீர் தொட்டியை இடித்துத் தள்ள வேண்டும் என்று  கோரி சத்தியமங்கலத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது கடந்த டிசம்பர் 26-ம் தேதி அன்று  தெரியவந்தது. இது குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஏடிஎஸ்பி தலைமையில் 11 பேர் கொண்ட குழு விசாரணை செய்தது. அதிலும் முன்னேற்றம் ஏற்படாததால் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்பொழுது சிபிசிஐடி போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

இதற்கிடையில் வேங்கைவயலில் 7 லட்சத்தில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. அதனால்  மனிதக்கழிவு கலக்கப்பட்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தி அங்கு ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் குமாரவேல் தலைமையில் இன்று  ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர்.

இதற்காக ஊர்வலமாக சென்றனர். சத்தியமங்கலம் பகுதியில் சென்றபோது இவர்களை அங்கு தயாராக காத்திருந்த  போலீஸார் தடுத்து நிறுத்தினர். தாங்கள்  தடுக்கப்பட்டதைக் கண்டித்தும், கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் அந்த இடத்திலேயே  சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீஸார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போராட்டத்தினால் புதுக்கோட்டை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in