நுபுர் சர்மா விமர்சனத்தால் உ.பியில் கலவரச்சூழல்: சிறப்புத் தொழுகை பாதுகாப்பிற்காக 132 சிறப்பு படை, 10 மத்திய பாதுகாப்பு படை குவிப்பு!

நுபுர் சர்மா விமர்சனத்தால் உ.பியில் கலவரச்சூழல்: சிறப்புத் தொழுகை பாதுகாப்பிற்காக 132 சிறப்பு படை, 10 மத்திய பாதுகாப்பு படை குவிப்பு!

தொலைக்காட்சி விவாதத்தில் கலந்துகொண்ட பாஜக செய்தித்தொடர்பாளரான நுபுர் சர்மா, முஸ்லிம்களின் இறைத்தூதர் முகம்மது நபியை தவறாக விமர்சித்திருந்தார். இதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் முஸ்லிம் நாடுகளும் கண்டனம் வெளியிட்டன. இதன் காரணமாக தன் பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நுபுர் சர்மா மீது இதுவரை கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த கோரிக்கையை உத்தரப் பிரதேச முஸ்லிம்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்காக அவர்கள் திரளாகக் கூடும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நாட்களும் உத்தரப் பிரதேச போலீஸாருக்கு சவாலாகி விட்டது. கடந்த 10-ம் தேதி கான்பூரின் மசூதியில் இதுபோன்ற தொழுகைக்கு பின் முஸ்லிம்கள் அமைதியாக கண்டன ஊர்வலம் நடத்தினர். எனினும், இதில் உருவானக் கலவரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதேபோன்ற கலவரங்கள் பிரயாக்ராஜ், சஹரான்பூர், முராதாபாத், ஹாத்தரஸ், பெரோஸாபாத், அம்பேத்கர்நகர் உள்ளிட்டப் பல நகரங்களிலும் உருவானது.

இதனால், உத்தரப் பிரதேச போலீஸாரால் இதுவரை 357 முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீது வழக்குகள் பதிவாகி உள்ளன. இவற்றில் முக்கிய குற்றவாளியாக பிரயாக்நாஜில் சிக்கிய ஜாவீத் என்பவரின் குடியிருப்பு, புல்டோசரால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இந்த செயலை உத்தரப் பிரதேசத்தின் எதிர்கட்சிகள் பலவும் கண்டித்துள்ளன. இப்பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்திலும் ஜமாத்துல் உலமா-எ-ஹிந்த் அமைப்பினர் வழக்குத் தொடுத்துள்ளனர்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமையான நாளை (ஜூன் 17) சிறப்பு தொழுகைக்காக உத்தரப் பிரதேசம் முழுவதும் மசூதிகளைச் சுற்றிப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதில், உத்தரப் பிரதேசத்தின் சிறப்பு போலீஸ் படையான பிஏசி 132 கம்பெனிகளும், மத்தியப் பாதுகாப்பு படையின் 10 கம்பெனிகளும் அமர்த்தப்பட்டுள்ளனர். முன்னதாக, முஸ்லிம் தலைவர்களை அழைத்து மாவட்ட நிர்வாகம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. இதை ஏற்று முஸ்லிம் தலைவர்களும், மவுலானாக்களும் தங்கள் பகுதி முஸ்லிம்களை அமைதி காக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர்.

குறிப்பாக, வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின் முஸ்லிகள் வீடுகளுக்கு நேராக செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுபோன்ற சூழல், உத்தரப் பிரதேசத்தில் பாபர் மசூதி இடிப்பின் போது வந்திருந்தது. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கும் பின் தற்போது முஸ்லிம்கள் இடையே கண்டனங்கள் கிளம்பியுள்ளன. இப்பிரச்சினையில் சமூகவிரோதிகளின் போலி தகவல்களும் வாட்ஸ் அப்புகளில் பரவுவது அதிகரித்துள்ளது. இதைத் தடுக்க முராதாபத்தில் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை அமலாக்கி உள்ளது.

இதனிடையே, நுபுர் சர்மாவிற்கு உ.பியின் இந்துத்துவாவினர் இடையே ஆதரவும் பெருகி வருகிறது. இவருக்கு ஆதரவளிப்பவர்கள் தங்கள் வீடுகளின் மீது காவிக்கொடிகளை பறக்க விடும்படி அறிவிப்பு விடப்பட்டுள்ளது. பிரயாக்ராஜ் மாவட்டத்தில் ஒட்டப்பட்ட இந்த அறிவிப்புகளை உத்தரப் பிரதேச போலீஸார் உடனடியாக அகற்றி நடவடிக்கை எடுத்துள்ளனர். பிரயாக்ராஜ், கான்பூர் மற்றும் வாரணாசியில் பஜ்ரங் தளம் அமைப்பின் தொண்டர்கள் இன்று ஊர்வலங்கள் நடத்தினர். வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின் முஸ்லிம்கள் கலவரம் நடத்துவதாகக் கூறி இதில் கண்டித்து கோஷம் எழுப்பினர்.

சஹரான்பூரில் கலவரம் செய்ததாகக் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் காவலின் போது போலீஸாரால் தாக்கப்பட்டனர். இதன் வீடியோ பதிவுகள் இந்துத்துவாவினர் இடையே மகிழ்ச்சியுடன் பகிரப்பட்டு வருகிறது. இதன் மீதான புகார்களை சஹரான்பூர் போலீஸார் மறுத்து வந்தனர். இந்த செய்திகள் சமூகவலைதளங்களிலும் பரவவே தற்போது இந்த பதிவுகளின் மீது சஹரான்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in