`உண்மை கண்டறியும் சோதனையில் மருத்துவர் இருக்க வேண்டும்'- ராமஜெயம் கொலை வழக்கில் ரவுடிகள் வலியுறுத்தல்

`உண்மை கண்டறியும் சோதனையில் மருத்துவர் இருக்க வேண்டும்'- ராமஜெயம் கொலை வழக்கில் ரவுடிகள் வலியுறுத்தல்

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக தமிழகத்தின் முக்கியமான 13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவது குறித்து திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு நவம்பர் 14-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு, மார்ச் 29-ம் தேதி நடை பயிற்சிக்குச் சென்றபோது  கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு சிபிஐ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளால் விசாரிக்கப்பட்டு, தற்போது  சிறப்பு புலனாய்வு குழு மூலம்  விசாரணை நடைபெற்று வருகிறது. சிபிசிஐடி  எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

விசாரணையின் ஒரு பகுதியாக  தமிழகத்தின் பிரபலமான  ரவுடிகள் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக  திருச்சி குற்றவியல்  நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அவர்கள் 13 பேருக்கும்  சம்மன் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த நவம்பர் 1-ம் தேதியன்று ரவுடிகள்  மோகன்ராம், தினேஷ் , நரைமுடி கணேசன், சத்யராஜ், கலைவாணன், மாரிமுத்து, தீலீப் என்கிற லட்சுமி நாராயணன், ராஜ்குமார், சுரேந்தர், சீர்காழி சண்முகம் , சிவ குணசேகரன் ஆகியோர் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில்  ஆஜரானார்கள்.

அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று சிறப்பு புலனாய்வு குழு சார்பில் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை எஸ்.பி ஜெயக்குமார் தான் தாக்கல் செய்ய வேண்டும் என்று ரவுடிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.  அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, எஸ் பி தரப்பில்  புதிய மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு  இந்த வழக்கை  7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அதன் பேரில் 7-ம்  தேதியான இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.  சிறப்பு புலனாய்வுக்குழு சார்பில் எஸ். பி ஜெயக்குமார் ஆஜராகி ரவுடிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு அனுமதி அளிக்கக்கோரி  புதிய மனுவை தாக்கல் செய்தார்.  திண்டுக்கல் மோகன்ராம், தினேஷ், நரை முடி கணேசன், லெப்ட் செந்தில் ஆகிய நான்கு   பேர் தவிர மற்றவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்கள். நான்கு பேர்  சார்பில் அவர்களது வழக்கறிஞர்கள்  ஆஜராகி இருந்தனர். 

இவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த  அவர்கள் ஒப்புக் கொண்டிருப்பதாகவும் சிறப்பு புலனாய்வு குழு  தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ரவுடிகள் தரப்பில் மருத்துவர் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர் உடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரப்பட்டது. 

அதையடுத்து உண்மை கண்டறியும் சோதனை குறித்த தங்கள் ஒப்புதலையும் அல்லது எதிர்ப்பையும் மனுவாக தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட நீதிபதி  வழக்கை நவம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in