இந்திய ராணுவத்தை கிண்டலடித்த நடிகைக்கு வலுக்கும் கண்டனம்

ரிச்சா சதா
ரிச்சா சதா

இந்திய ராணுவத்தின் வீரத்தை கொச்சைப்படுத்தும் வகையில் சமூக ஊடகத்தில் பதிவிட்ட பாலிவுட் நடிகைக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வருகின்றன. நடிகை மன்னிப்பு கேட்ட பிறகும் அவருக்கு எதிரான காவல்துறை புகார்கள் அதிகரித்து வருகின்றன.

’கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்’ தொடங்கி ’ஷகீலா’ பயோபிக் வரை பல்வேறு வட இந்திய திரைப்படங்கள் மற்றும் வலைத்தொடர்களில் நடித்து பிரபலமானவர் ரிச்சா சதா. துணிச்சலான நடிப்பு, கவர்ச்சியான உடுப்பு என தனக்கென தனி ரசிகர்களையும் வைத்திருக்கிறார். சமூக ஊடக வெளியில் களமாடும்போது ஆழம் தெரியாது காலை விட்டதில் தற்போது கடும் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறார் ரிச்சா சதா.

பாகிஸ்தானின் ராணுவ தலைமை மாறுவதை முன்னிட்டு பாக்-இந்தியா இடையிலான ராணுவ பலத்தை பறைசாற்றும் பதிவுகள் கடந்த இரு தினங்களாக இரு நாடுகளிடையே அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இந்திய ராணுவத்தின் தீரத்தை மெச்சும் வகையில் இந்திய ராணுவத்தின் தளபதிகள் சிலரும் பதிவிட்டு வந்தனர். அவற்றில் ஒரு பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகை ரிச்சா சதா, பகடி செய்யும் பாங்கில் ஒரு அபத்த வாசகத்தையும் சேர்த்திருந்தார்.

’பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கும் காஷ்மீரை மீட்க சித்தமாக உள்ளோம். அரசின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். அதற்கு முன்னதாக, பாகிஸ்தான் போர் ஒப்பந்தத்தை மீறுவதாக தென்பட்டால் அது நினைத்து பார்க்காத வகையில் எங்கள் பதில் இருக்கும்’ என்பதுதான் வடக்கு பிராந்திய ராணுவ கமாண்டர் பதிவின் சாரம்சம். இதனை பலரும் பகிர்ந்து இந்திய ராணுவத்தின் வீர முழக்கமாக ட்விட்டரில் எதிரொலித்து வந்தனர். இதே பதிவை பகிர்ந்ததோடு, ‘கல்வான் ஹாய் சொல்கிறது’ என்று தனது கருத்தையும் சேர்த்திருந்தார் ரிச்சா சதா. எதிர்ப்புகள் வலுத்ததும் உடனடியாக அதனை நீக்கவும் செய்தார். பிற்பாடு விளக்கம், மன்னிப்பெல்லாம் கேட்டார். ஆனபோதும் ரிச்சாவுக்கு எதிரான கண்டனங்கள் எகிறி வருகின்றன.

பொதுவாக இந்திய எல்லையில் வாலாட்டும் பாகிஸ்தான், சீனா ஆகிய இரு அண்டை தேசங்களிடமும் இருவேறு அளவுகோல்களை பாவிப்பதாக இந்திய தரப்பு அரசியல்வாதிகள் குறிப்பாக ஆளும் பாஜகவினர் மீது குற்றச்சாட்டு உண்டு. நம்மைவிட பலவீனமான பாகிஸ்தான் மீது எதற்கெடுத்தாலும் பாய்வதும், அதுவே உலக வல்லரசான சீனா என்றால் பம்முவதுமாக தொடர்கிறது. வறுமை, இயற்கை பேரிடர், ஆட்சியாளர்களின் ஊழல் என தனக்கான குழியை சுயமாக பறித்துக்கொண்டிருக்கும் பாகிஸ்தானை பரம விரோதியாகவும், இந்திய எல்லைக்குள் அத்துமீறி கிராமங்களை நிர்மாணித்து வரும் சீனாவை சீண்டாது இருப்பதும் ஆளும் அரசியல்வாதிகளை அதிகம் கேள்விக்குள்ளாகி வருகிறது.

இந்த பின்னணியில் இருந்தே ரிச்சாவும் தனது பதிவை சேர்த்திருந்தார். ’பாகிஸ்தான் என்றால் குரல் எழுப்புவோர், கல்வான் எல்லையில் இந்திய வீரர்களை கொன்று குவித்த சீனாவுக்கும் பதில் சொல்லுங்களேன்’ என்பதுதான் ரிச்சா சொல்ல வந்தது. ஆனால் அதன் மறுபக்கத்தில் தென்பட்ட இந்திய ராணுவத்தை கிண்டல் செய்யும் தொனியை, மற்றவர்கள் சுட்டிக்காட்டியதில் உடனடியாக பதிவை நீக்கியதோடு மன்னிப்பும் கேட்டார்.

ஆனபோதும் ’பாலிவுட்டை புறக்கணிப்போம், ரிச்சா விளம்பரம் செய்யும் நுகர்பொருட்களை புறக்கணிப்போம், இஸ்லாமியரை திருமணம் செய்த பிறகுதான் இப்படி ரிச்சா மாறிவிட்டார்’ என்றெல்லாம் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இதில் அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பிரபல நடிகர்களும் சேர்ந்துகொண்டனர். தனது பதிவின் விபரீதம் அறிந்த ரிச்சா மன்னிப்பு கேட்டதோடு தனது தாத்தா ராணுவத்தில் பணியாற்றியை நினைவுகூர்ந்து, ’தேசபக்தி எனது ரத்தத்தில் கலந்திருப்பதாக’ உருகியிருக்கிறார். ஆனால் அவர் குரலை எவரும் செவிமெடுப்பதாக தெரியவில்லை. மும்பை மற்றும் டெல்லி காவல் நிலையங்களில் ரிச்சாவுக்கு எதிரான புகார்கள் அடுத்தடுத்து பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அடுத்து வெளியாகவிருக்கும் அவரது திரைப்படத்துக்கு எதிராகவும் இப்போதே பிரச்சாரத்தையும் ரிச்சா எதிர்ப்பாளர்கள் தொடங்கியிருக்கின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in