
அசாம் தேசிய பூங்காவிற்கு சென்ற சுற்றுலாப்பணிகளை 3 கி.மீ தூரம் காண்டாமிருகம் துரத்தி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அசாமில் சுமார் ஆயிரம் கி.மீ பரப்பளவு கொண்ட காசிரங்கா தேசிய வனவிலங்கு பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. ஆனாலும், இந்த பூங்கா இந்திய வகை காண்டாமிருகங்களின் இல்லம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பூங்காவிற்குள் சுற்றுலாப்பயணிகள் ஜீப் மூலம் சஃபாரி சென்று வன விலங்குகளை ரசிப்பதற்கான அனுமதி உள்ளது.
அப்படி இந்த பூங்காவில் சஃபாரி ஜீப்புகள் பூங்காவின் ஹபரி வனப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு புதரில் இருந்து காண்டா மிருகம் வெளிப்பட்டு அவர்களைத் துரத்தத் தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஜீப் ஓட்டுநர்கள் வாகனத்தை விரைந்து இயக்கினாலும் காண்டாமிருகம் 3 கி.மீ தொலைவிற்கு அவர்களைத் தொடர்ந்து விரட்டி வந்துள்ளது.
அப்போது சுற்றுலப்பயணி ஒருவர், தனது செல்போன் மூலம் அந்த காட்சியைப் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தேசிய பூங்காவில் மனித நடமாட்டம் அதிகரிப்பதன் காரணமாக ஏற்படும் அமைதியின்மையால் இது போன்ற சம்பவங்கள் நடப்பதாக வனவிலங்கு ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த பூங்காவில் மட்டும் 2,613 காண்டாமிருகங்கள் வசிக்கின்றன. இயற்கை காரணங்களால் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 400 காண்டாமிருகங்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனாலும், காண்டாமிருகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 400 காண்டாமிருகங்கள் உயிரிழந்தாலும் மொத்த எண்ணிக்கையில் 200 காண்டாமிருகங்கள் உயர்ந்துள்ளன என பூங்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது.