‘காங்கிரஸின் மறுமலர்ச்சி தொடங்கிவிட்டது’ - சசி தரூர் கருத்து!

‘காங்கிரஸின் மறுமலர்ச்சி தொடங்கிவிட்டது’ - சசி தரூர் கருத்து!

காங்கிரஸின் மறுமலர்ச்சி தொடங்கிவிட்டதாக, கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடும் சசி தரூர் தெரிவித்திருக்கிறார்.

2019 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்துவிட்ட பின்னர், இடைக்காலத் தலைவராக சோனியா நீடிக்கிறார். தொடர்ந்து தோல்விகளை எதிர்கொள்ளும் காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்க நிரந்தரத் தலைவர் தேவை எனும் குரல் ஒலிக்கத் தொடங்கியது. இதுதொடர்பாக சோனியா காந்திக்கு ஜி-23 தலைவர்கள் பகிரங்கக் கடிதம் எழுதினர். இதன் பின்னரும் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் தொடங்காததால் அதிருப்தி அதிகரித்தது.

இந்நிலையில், ஆகஸ்ட் 28-ல் நடந்த காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தேர்தல் நடந்துவருகிறது. சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்தனர். ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் போன்ற தலைவர்களும் வாக்களித்தனர். இந்திய ஒற்றுமைப் பயணத்தில் ஈடுபட்டிருக்கும் ராகுல் காந்தி பெங்களூருவின் பெல்லாரியில் வாக்களித்தார். சோனியா காந்தி குடும்பத்தின் ஆதரவுடன் போட்டியிடும் மல்லிகார்ஜுன கார்கே, பெங்களூருவில் வாக்களித்தார். அவரை எதிர்த்துப் போட்டியிடும் சசிதரூர் திருவனந்தபுரத்தில் தனது வாக்கைச் செலுத்தினார்.

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சசிதரூர், “காங்கிரஸின் மறுமலர்ச்சி தொடங்கிவிட்டதாகவே நான் நம்புகிறேன்” என்று கூறினார். மேலும், “இன்று மல்லிகார்ஜுன கார்கேயிடம் பேசினேன். ‘என்ன நடந்தாலும் நாம் சக கட்சிக்காரர்களாகவும், சகாக்களாகவும் இருப்போம்’ என்று அவரிடம் தெரிவித்தேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் குறித்து முன்பு கருத்து தெரிவித்திருந்த சசி தரூர், “பிரிட்டனின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவருக்கான போட்டி கடுமையாகிக்கொண்டே போகிறது; அதன் மூலம் அக்கட்சி உலகளாவிய கவனம் பெற்றுவருகிறது. அதேபோல், காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் தேசிய அளவில் கவனம் ஈர்க்கும், மேலும் அதிக வாக்காளர்களைத் திரட்டித் தரும்” என்று ‘மலையாள மனோரமா’ இதழில் வெளியான கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in