நண்பனைக் கொன்றவர்களைப் பழிவாங்க கூட்டாளியுடன் ஸ்கெட்ச்: நாட்டு வெடிகுண்டுகளுடன் ரவுடி கைது

நண்பனைக் கொன்றவர்களைப் பழிவாங்க கூட்டாளியுடன் ஸ்கெட்ச்: நாட்டு வெடிகுண்டுகளுடன் ரவுடி கைது

போரூர் அருகே நண்பனைக் கொன்றவர்களைப் பழிவாங்க நாட்டு வெடிகுண்டுகளுடன் பதுங்கியிருந்த பிரபல ரவுடி கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி தினேஷ் என்ற பீடி தினேஷ்(23). சரித்திரப் பதிவேடு குற்றவாளியான பீடி தினேஷ் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் வழக்கு ஓன்றில் நுங்கம்பாக்கம் போலீஸார் தேடிவருவதை அறிந்து கொண்ட தினேஷ் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தலைமறைவானார்.

இதனையடுத்து நுங்கம்பாக்கம் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸார், தினேஷை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் ரவுடி பீடி தினேஷ் போரூரில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.அதன்பேரில் இன்று தனிப்படை போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரவுடி பதுங்கி இருந்த வீட்டைச் சுற்றி வளைத்து ரவுடி தினேஷ் மற்றும் அவனது கூட்டாளியான காரம்பாக்கத்தைச் சேர்ந்த அஜீம் என்ற முகமது அஜீம்(22) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் ரவுடி தங்கியிருந்த வீட்டில் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அங்கு 5 நாட்டு வெடிகுண்டு, கத்தி, உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றைக் கண்டுபிடித்தனர். அங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து நாட்டு வெடிகுண்டுகளைப் பறிமுதல் செய்தனர். பின்னர் ரவுடி தினேஷ், அஜீம் ஆகிய இருவரை காவல் நிலையம் அழைத்து சென்று போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது, கடந்த இரண்டு மாதங்களாக ரவுடி பீடி தினேஷ் போரூரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தனது கூட்டாளி அஜீமுடன் தங்கியிருந்தது தெரியவந்தது. மேலும் இரு மாதங்களுக்கு முன்பு ரவுடி பீடி தினேஷின் நண்பரான ரவுடி குள்ளகுமார்(21) என்பவரை நுங்கம்பாக்கத்தில் வைத்து மற்றொரு ரவுடி கும்பலைச் சேர்ந்த சாம்பார் என்ற தனசேகர், சங்கு சாம்பா என்ற பார்த்திபன், ராஜா,ரபீக் ஆகியோர் சேர்ந்து கொலை செய்துள்ளனர். அந்த கொலைக்கு பழிவாங்கும் விதமாக ரவுடி தனசேகரை கொலை செய்ய திட்டம் தீட்டியதும் தெரிய வந்தது. அதற்காக பெரும்பாக்கத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு வாங்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் இருவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in