
தவறான பெண் தொடர்புகளைக் கண்டித்ததாலும், சொத்து கேட்டும் தனது மாமனாரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் திமுக பிரமுகர் சைவராசு (72). இவரது மகள் லதா. இவரின் கணவர் ராணுவ வீரர் ரவிச்சந்திரன். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. 1991 முதல் 2011-ம் ஆண்டு வரை ராணுவத்தில் பணியாற்றிய ரவிச்சந்திரன் தற்போது கந்தர்வக்கோட்டை சிவன் கோயில் காவலாளியாக உள்ளார்.
இந்நிலையில் ரவிச்சந்திரனுக்கு வேறு சில பெண்களுடன் முறையற்ற தொடர்பு இருந்ததால் அவரது மனைவி லதா கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் லதா தனது குழந்தைகளுடன் தந்தை வீட்டிற்கு வந்துவிட்டார். ஆனால் ரவிச்சந்திரன் தனது மனைவி பெயரில் உள்ள சொத்துகளைத் தன் பெயருக்கு எழுதிக் கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.
குடும்ப பிரச்சினை சம்பந்தமான புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. அதற்காக நேற்று நீதிமன்றம் சென்று திரும்பி உள்ளனர். சைவராசு பேருந்தை விட்டு இறங்கி வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு தயாராக காத்திருந்த ரவிச்சந்திரன் துப்பாக்கியால் தலையில் குறி பார்த்துச் சுட்டார். இதில் சைவராசு தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
துப்பாக்கிச் சத்தம் கேட்டு சைவராசு குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் ஓடி வருவதற்குள் ரவிச்சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை விரட்டிச் சென்று போலீஸார் கைது செய்தனர். சைவராசு இது குறித்து காவல் நிலையத்தில் முன்னரே புகார் அளித்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்காத கந்தர்வக்கோட்டை போலீஸாரைக் கண்டித்து சைவராஜின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சொத்திற்காக தன் மாமனாரையே ஓய்வுபெற்ற ராணுவ வீரர் சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.