`வேல், சூலாயுதம் கொண்டு வரக்கூடாது; சாதி அடையாளம் கூடாது'- குலசை தசரா விழாவில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு

`வேல், சூலாயுதம் கொண்டு வரக்கூடாது; சாதி அடையாளம் கூடாது'- குலசை தசரா விழாவில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் மாலை இட்டு, விரதம் இருந்து வருகின்றனர். கூடவே வேடம் தரித்தும் காணிக்கைப் பெற்றுவருகின்றனர். இந்தக் காணிக்கையை கோயிலில் கொண்டுபோய் செலுத்துவார்கள். இந்நிலையில் தசரா விழாவுக்கு குலசேகரப்பட்டினம் வரும் பக்தர்களுக்கான கட்டுப்பாடுகள், விதிமுறைகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் சில அறிவுறுத்தல்கள் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “தசரா திருவிழாவின் மைய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 5-ம் தேதி நடக்கிறது. விழாவின் போது ஊருக்கு உள்ளே, வெளியே எந்த ஒரு பகுதியிலும் ஆபாச நடனம் ஆட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆபாச பாடல்கள், சினிமா பாடல்கள் இசைக்கவும், தவறான வார்த்தைகளை உபயோகிக்கவும் தடை உள்ளது. ஆடல், பாடல் கலை நிகழ்ச்சி நடத்துபவர்கள் உரிய அனுமதி பெற்று முழுதாக அதை வீடியோவாகவும் எடுக்கவேண்டும்.

திறந்தவெளி வாகனத்தில் பாதுகாப்பற்ற முறையில் பக்தர்களை ஏற்றிவந்தால் சம்பந்தப்பட்ட வாகனத்தின் ஓட்டுநர், உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். உலோகத்தால் ஆன வேல், சூலாயுதம், வாள் போன்ற எந்தப் பொருள்களையும் கொண்டுவர அனுமதி இல்லை. இதேபோல் சாதி அடையாளங்களுடன் தொப்பி, உடை, கொடி, ரிப்பன் ஆகியவற்றுக்கும் அனுமதி இல்லை. காவல்துறையினர் போல் சீறுடை அணிந்து வரவும், அதிக சத்தத்துடன் டிரம் அடித்து சுற்றுச்சூழலுக்கு பங்கம் ஏற்படுத்தி வரவோ அனுமதி இல்லை.

கோயில் மற்றும் கோயிலைச் சுற்றியுள்ள இடங்களில் கண்காணிப்புக் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். வியாபாரிகள் அனுமதி இன்றி பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்வகையில் கடைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தசரா குழுக்களாக வருபவர்கள் முக்கிய சந்திப்புகளில் வரும்போது பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு இல்லாமல் வரவேண்டும்” எனவும் கூறப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in