
மூன்றாவது உலகப்போர் தண்ணீருக்காகவே மூளும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துவிட்டனர். நீர் இல்லாமல் பல நாடுகள் வறுமைக்கு சென்றுள்ளது. ஏன் பல நாடுகள் அழிவின் விளிம்பிலும் உள்ளது. இதனால்தான் ஒவ்வொரு சொட்டு நீரும் பொக்கிசமாக பார்க்கப்படுகிறது. அத்தகைய நீரை பாதுகாக்க உலக நாடுகள் மற்றும் ஐ.நா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழலில் நீர் மேலாண்மையை மேம்படுத்துவது குறித்து தமிழக இளைஞர் ஒருவர் உலக நாடுகளுக்கெல்லாம் பாடம் எடுத்து வருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிமல் ராகவன் உலக நாடுகளுக்கு நீர்நிலை புனரமைப்பு தொடர்பாக ஆலோசனை வழங்கி வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அடுத்த நாடியம் கிராமத்தைச் சேர்ந்தவர் நிமல் ராகவன். நீர்நிலைகளை புனரமைக்கும் பணியில் தமிழ்நாட்டின் மிக முக்கிய அடையாளமாக மாறி வருகிறார் நிமல் ராகவன்.
இவர் தற்போது வரை 166 நீர் நிலைகளை புனரமைத்துள்ளதாக கூறப்படுகிறது. விவசாய குடும்பத்தில் பிறந்த நிமல் ராகவன், பொறியியல் படித்துவிட்டு துபாயில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு டெல்டாவை புரட்டிப்போட்ட கஜா புயலால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட நிலையை உணர்ந்த பின்னர் இந்த துறைக்கு வந்துள்ளார் நிமல் ராகவன். தனது சொந்த ஊரில் உள்ள ஏரியை தூர்வாரும் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளார்.
அந்த ஏரி சுமார் 564 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய ஏரியாகும். அந்த ஏரியை தூர்வார சுமார் 27 லட்சம் செலவு செய்யப்பட்டதாகவும், அதற்காக சமூக ஊடகங்கள் மூலம் நிதி திரட்டியதாகவும் கூறப்படுகிறது. இப்போது அந்த ஏரியின் மூலம் 6,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதியைப் பெருவதால் உற்சாகமடைந்த நிமல் ராகவன், பின்னர் இந்த பணியை தொடர்ச்சியாக செய்ய முடிவெடுத்துள்ளார்.
அதன்பின்னர் மெகா ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி, அதன்மூலம் உதவிகளை செய்து வருகிறார். இதற்காக இவருக்கு நிதி உதவியும் வருவதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மட்டுல்லாது இந்தியாவில், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் நீர் புனரமைப்பு பணியை மேற்கொண்டுள்ளார். அதோடு இல்லாமல் தற்போது வறண்ட நிலமாக காட்சியளிக்கும் ஆப்பிரிக்காவிற்குச் சென்று தனது பணியை தொடங்கவுள்ளார். இதுகுறித்து ஒரு ஆங்கில இணையதளத்திற்கு பேட்டியளித்த நிமல் ராகவன், “கடந்த 2 ஆண்டுகளாக தங்களுக்கு உதவிட வருமாறு, கென்யாவை சேர்ந்த கிரீன் ஆப்பிரிக்கா ஃபவுண்டேஷன் நிறுவனம் அழைத்தது. தற்போது தான் இங்கு வரமுடிந்தது. இங்கு வந்து மூன்று நீர்நிலைகளை புனரமைத்துள்ளோம். அதுமட்டுமல்லாது, 19 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய ஏரி ஒன்றையும் புனரமைக்க உள்ளோம்.” எனத் தெரிவித்தார்.