`தயார் நிலையில் மீட்பு குழு; பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்'- சென்னை காவல் ஆணையர் அலர்ட்

`தயார் நிலையில் மீட்பு குழு; பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்'- சென்னை காவல் ஆணையர் அலர்ட்

மேன்டூஸ் புயல் கரையை கடக்க உள்ள நிலையில், தயார் நிலையில் மீட்பு குழுவினர் இருப்பதாகவும், அத்தியாவசிய தேவைகளின்றி பொதுமக்கள் வெளியில் வரவோ, கடற்கரைக்கு செல்லவோ வேண்டாம் எனவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேன்டூஸ் புயல் இன்று நள்ளிரவு கரையைக்கடக்க உள்ள நிலையில் சென்னை காவல்துறை சார்பில் தயார் நிலையில் உள்ள மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கான காவல் குழுவினர் மற்றும் உபகரணங்களை சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆய்வு செய்து காவலர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்காக பிரத்யேகமாக மொத்தம் 12 குழுவினர் தயாராக இருக்கின்றனர். அந்த குழுவினருக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் 16,000 போலீஸார் மற்றும் 1,500 ஊர்க்காவல் படையினர் தேவையான மீட்புபணியில் ஈடுபட தயாராக உள்ளனர்.

அதேபோல் சாலையில் மரம் விழுதல் உள்ளிட்ட பணிகளுக்காக இந்த குழுவினருக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதிப்பு பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட நான்கு படகு குழுவினரும் தயார் நிலையில் இருக்கின்றனர். மேலும் இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை மழை நீர் தேங்கும் இடங்கள், சாலையில் மரம் விழும் இடங்கள், போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்டவை குறித்த தகவல்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 12 மீட்புக் குழுவில் ஒரு குழுவுக்கு 10 பேர் என்ற அடிப்படையில் மீட்பு பணியிலும், படகு குழுவில் 5 பேர் என மொத்தம் 180 காவலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேன்டூஸ் புயல் காரணமாக சென்னை காவல்துறையில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது. பொதுமக்கள் 112, 1913 ஆகிய எண்களை தொடர்பு கொண்டும், சமூக வலைதளம் மூலமாகவும் தங்களுக்கான உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும் புயல் நள்ளிரவில் கரையை கடக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் அவசர தேவை இன்றி வெளியில் வர வேண்டாம். அதோடு கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடற்கரைக்கு செல்வதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். பழைய கட்டிடங்கள் கணக்கீடு செய்யப்பட்டு அங்கு வசிப்பவர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்ய தயாராக உள்ளாேம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in