`சாப்பாடு தருவதில்லை; தனி அறையில் அடைத்து கொடுமை'- மியான்மரில் இருந்து சென்னை திரும்பிய தமிழர்கள் கண்ணீர்

`சாப்பாடு தருவதில்லை; தனி அறையில் அடைத்து கொடுமை'- மியான்மரில் இருந்து சென்னை திரும்பிய தமிழர்கள் கண்ணீர்

மியான்மரில் இருந்து சென்னை திரும்பிய தமிழர்களை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் விமான நிலையத்தில் வரவேற்றார்.

தமிழகத்தில் போலி ஏஜென்டுகள் மூலம் மியான்மர் நாட்டுக்கு வேலைக்கு சென்ற 22 தமிழர்கள் அங்கு கொடுமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் தங்களை மீட்க கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. மத்திய அரசு உதவியுடன் 22 தமிழர்களும் இன்று தாயகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னை விமான நிலையத்திற்கு இன்று காலை வந்த 22 தமிழர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், "தமிழர்கள் சொல்வதைக் கேட்கும் போது கஷ்டமாக இருக்கிறது. அவர்கள் சொன்ன வேலை ஒன்று. செய்ய சொல்கிற வேலை ஒன்று என்று அவர்கள் சொன்னார்கள். இந்த வேலையை நாங்கள் செய்ய மாட்டோம் என்று மறுத்தால் எங்களை தண்டிக்கிறார்கள். சாப்பாடு கொடுப்பதில்லை. தனி அறையில் கொண்டு போய் எங்களை தங்க வைக்கிறார்கள். அதுவும் இல்லாமல் சிறையில் எங்களை அடைக்கிறார்கள். இப்படிப்பட்ட கொடுமை எல்லாம் நடக்கிறது என்று பாதிக்கப்பட்டவர்கள் சொல்கிறார்கள்.

இந்த கொடுமை மேலும் யாருக்கும் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் இங்கு பாதிக்கப்பட்டு வந்திருக்கிற இளைஞர்கள் மற்ற இளைஞர்களுக்கு சொல்ல வேண்டும் என்று அன்பான வேண்டுகோள் வைத்திருக்கிறோம். பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், மாவட்ட கண்காணிப்பாளர்களிடமும் புகார் கொடுக்க சொல்லி இருக்கிறோம். ஏஜென்டுகள் மீது பல்வேறு புகார்கள் கூறப்பட்டு இருக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருச்சியில் இரண்டு ஏஜென்டுகள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பல ஏஜென்டுகளிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறோம். அவர்கள் வசூலித்த பணத்தை கொடுப்பதாக கூறியிருக்கின்றனர். இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்டவர்களின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக அரசு முழு முயற்சி எடுக்கும். பாதிக்கப்பட்டவர்களும் முழு முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். கடந்த காலத்தில் தமிழர்கள் எந்த நாட்டுக்கு போகிறார்கள், எந்த நிலையில் இருக்கிறார்கள், அவர்கள் வந்தார்களா போனார்களா என்று கூட தெரியாமல் பெற்றோர்கள் தவிக்கின்ற நிலை இருந்தது. இப்போது இந்த துறையின் மூலமாக விழிப்புணர்வை உண்டாக்கிய காரணத்தினால் தான் நீங்களும் (பத்திரிகையாளர்கள்) நாட்டு மக்களுக்கு தொடர்ந்து தெரிவித்து கொண்டு இருக்கும் காரணத்தினால் தான் இப்போது போலி ஏஜென்டுகள் மூலம் வெளிநாட்டுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கிறது. வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் எந்த நிறுவனத்தின் மூலமாக செல்கிறார்கள் என்பதை அறிந்து சொல்வதற்காக அரசு ஆலோசனை கேட்டு வருகிறார்கள்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in