எண்ணூர் கடலில் குளித்தபோது மாயமான 3 பேர் சடலமாக மீட்பு: மற்றொருவரைத் தேடும் பணி தீவிரம்

எண்ணூர் கடலில் குளித்தபோது மாயமான 3 பேர் சடலமாக மீட்பு: மற்றொருவரைத் தேடும் பணி தீவிரம்

எண்ணூர் அருகே நேற்று கடலில் குளித்த போது அலையில் சிக்கிய வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மாயமான மற்றொருவரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியிலுள்ள கடற்கரைக்கு நேற்று உத்தர பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 23 பேர் சென்றுள்ளனர். எண்ணூர் ஆண்டாள் குப்பம் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வரும் இவர்கள் விடுமுறை தினமான நேற்று பொழுதை கழிப்பதற்காக கடற்கரைக்கு வந்த நிலையில், அதில் 8 பேர் மட்டும் கடலில் இறங்கி குளித்தனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி 4 பேர் மாயமான நிலையில் மற்ற 4 பேர் பத்திரமாக கரைக்கு திரும்பினர். பின்னர் அவர்கள் அளித்த தகவலின் பேரில் எண்ணூர் காவல்துறையினர் தீயணைப்பு வீரர்களுடன் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து கடலில் மூழ்கி காணமல் போன முஸ்கீன்(22), இப்ராஹிம்(22), வஷீம்(26), புர்கான்(28) ஆகிய நால்வரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இவர்களுடன் மெரினா நீச்சல் வீரர்களும் அப்பகுதி மீனவர்களும் கூட்டு சேர்ந்து மாயமானவர்களை தேடிவந்தனர். இந்நிலையில் இன்று ராமகிருஷ்ணா நகர் கடற்கரையோரம் வசீம், முஸ்கீம், புர்கான் ஆகிய 3 பேரின் உடல்கள் கரை ஒதுங்கியது. அவர்களது உடலை மீட்டு போலீஸார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியதுடன் மாயமான இப்ராஹீமை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in