உணவு மட்டும் தான், சம்பளம் கிடையாது: கொத்தடிமையாக இருந்த 24 வடமாநில சிறுவர்கள் மீட்பு

தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜெயலட்சுமி
தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜெயலட்சுமி உணவு மட்டும் தான், சம்பளம் கிடையாது: கொத்தடிமையாக இருந்த 24 வடமாநில சிறுவர்கள் மீட்பு

சென்னை சவுகார்பேட்டை பகுதிகளில் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த 24 சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் வேலைக்காக வந்த வண்ணம் உள்ளனர். குறைந்த ஊதியத்தில் அவர்கள் வேலை செய்வதால் பெரும்பாலான தொழிலில் வடமாநிலத்தவர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரம் மிகப்பெரிய பேசுபொருளாக தற்போது மாறி வருகிறது. இந்த நிலையில், கொத்தடிமைகளாகவும், சட்டவிரோதமாக வட மாநில குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதும் தொடர்கதையாக உள்ளது.

குறிப்பாக வட மாநிலத்திலிருந்து சிறுவர்களை தரகர்கள் மூலம் அழைத்து வரப்பட்டு சிறு சிறு தொழில்களில் கொத்தடிமைகளாக பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதனைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு தொழிலாளர் நலத்துறை, காவல்துறை, சமூக ஆர்வலர்கள், குழந்தைகள் நலத்துறை உள்ளிட்ட அதிகாரிகள் இணைந்து அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் சென்னை சவுகார்பேட்டை பகுதியில் தங்க, வெள்ளி, பட்டறைகளில் 14 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. இதன் பேரில் இன்று சோதனை மேற்கொண்டு 24 வட மாநில சிறுவர்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட சிறுவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் 5000 ரூபாயை பெற்றோர்களிடம் கொடுத்துவிட்டு இந்த சிறுவர்கள் அழைத்துவரப்பட்டதும், இவர்களை 12 மணி நேரத்திற்கு மேலாக ஓய்வின்றி வேலை வாங்கிக்கொண்டு சம்பளம் ஏதும் கொடுக்காமல் உணவு மட்டும் கொடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குழந்தை தொழிலாளர் நலச் சட்டத்தின் படி 14 வயதுக்கு கீழ் உள்ளவர்களைப் பணியமர்த்தக் கூடாது என்ற சட்டத்தை மீறி செயல்படுவதோடு மட்டுமல்லாது, 14 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை ஆபத்தான தொழிலில் பயன்படுத்தக் கூடாது என்ற விதிகளையும் மீறி சவுகார்பேட்டையில் குழந்தை தொழிலாளர்கள் கொத்தடிமைகள் போல் நடத்தியது தெரியவந்தது.

இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஜெயலட்சுமி கூறுகையில், " விதிகளை மீறி குழந்தை தொழிலாளர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. பெற்றோர்களுக்குத் தெரிந்தே இரண்டாவது முறை குழந்தைகள் கொத்தடிமைகளாக அனுப்பப்பட்டால் பெற்றோர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்" என்று கூறினார். மேலும் " கடந்த ஆறு மாதங்களில் 38 வட மாநில குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in