கர்நாடகத்தில் கொத்தடிமைகளாக இருந்த தமிழர்கள் 11 பேர் மீட்பு

பைல் படம்.
பைல் படம்.

கர்நாடக மாநிலத்தில் கொத்தடிமைகளாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த இருளர் இன மக்கள் 11 பேர் அதிரடியாக  மீட்கப்பட்டு ஊர் திரும்பியுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பாலூர் ஆர்.பட்டியைச் சேர்ந்தவர் விஜயன் (28).  இருளர் இனத்தைச் சேர்ந்த இவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கர்நாடக மாநிலம் ஹசான் மாவட்டம் கன்னிகடா கிராமத்தில் கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றார். ஆனால், இந்த மூன்றாண்டு  காலத்தில் ஒரு நாள்கூட தனது சொந்த ஊருக்கு அவர்  வரவில்லை. இதனையடுத்து ஊரில் உள்ள உறவினர்கள்  விஜயனைக் காண கன்னிகடா கிராமத்திற்குச் சென்றனர். 

அங்கு சென்று பார்த்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விஜயன் அங்கு  கொத்தடிமையாக வேலை பார்த்து வந்தது தெரிந்தது. மேலும்  விஜயனின் உறவினர்கள் பத்து பேரும் அதே கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக கொத்தடிமைகளாக  இருப்பதும் தெரியவந்தது.  அதனையடுத்து இது தொடர்பாக    ஹசான் மாவட்ட   நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் சம்பத் என்பவர் மூலம்  மனு அளிக்கப் பட்டது.

அந்த மனுவில் தெரிவித்த புகார் குறித்து  சந்திராபட்னா வருவாய் துறையினரும், காவல் துறையினரும்  கன்னிகடா கிராமத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். அவர்களின் விசாரணையில் விஜயன் மற்றும் அவரது உறவினர்கள் கொத்தடிமைகளாக இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து அவர்கள் 11 பேரையும்  மீட்டு  வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா முன்னிலையில்  ஒப்படைத்தனர். 

அவர்கள்  11 பேரும்  சொந்த ஊருக்கு அழைத்து வந்த அதிகாரிகள் விஜயன் உட்பட 11   பேரின் வங்கிக் கணக்கில் அவர்களது மறுவாழ்வுக்காக  தமிழக அரசு சார்பில் ரூ.30 ஆயிரம் பணம் செலுத்தப்பட்டது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in