`வெற்று அறிவிப்புகளால் ஆவினை அழித்துவிடாதீர்கள்'- அமைச்சர் நாசருக்கு பொன்னுசாமி கடிதம்

`வெற்று அறிவிப்புகளால் ஆவினை அழித்துவிடாதீர்கள்'- அமைச்சர் நாசருக்கு பொன்னுசாமி கடிதம்

வெற்று அறிவிப்புகளால் ஆவினை அழித்து விடாதீர்கள் என பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசருக்கு வேண்டுகோள் விடுத்து  பால் முகவர்கள் சங்கம் மனம் திறந்த மடல் எழுதியுள்ளது. 

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் தலைவர்  சு.ஆ.பொன்னுசாமி பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு எழுதியுள்ள திறந்த கடிதத்தில், `பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் அவர்களுக்கு வணக்கம். விரைவில் கோடை காலம் வருவதால் ஆவினில் இருந்து கூல் டிரிங்ஸ் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும், தற்போது அதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அறிவித்துள்ளீர்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தாங்கள் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை பால்வளத்துறையில் அறிவிப்புகளுக்கு மட்டும் பஞ்சமில்லாமல் இருக்கிறதே தவிர அந்த அறிவிப்புகளை முறையாக செயல்படுத்தவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

குறிப்பாக ஆவினில் இருந்து ஆட்டுப் பால், நாட்டுப் பசும் பால், தண்ணீர் பாட்டில் உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்றீர்கள், செய்தீர்களா? இல்லை. மேலும் ரேஷன் கடைகளில் ஆவின் பால் பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தீர்கள். ஆனால் அதைச் செய்யவில்லை.

கோடை காலத்திற்கேற்ற ஆரோக்கிய பானங்களான மோர், லஸ்ஸி, பால் சார்ந்த மில்க் ஷேக் மற்றும் பல்வேறு சுவைகளிலான நறுமணப் பால் வகைகள் ஆவினில் ஏற்கெனவே இருக்கும் போது அதனுடைய விற்பனையை ஊக்குவிக்க, கோடைகால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அவற்றின் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை நீங்கள் எடுத்திருக்க வேண்டும், ஆனால் செய்யவில்லை.

பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலையை வரலாறு காணாத வகையில் உயர்த்தி விட்டு அதன் மூலம் கிடைத்த வருவாயை கொண்டு கடந்த ஆட்சியை விட திமுக ஆட்சியில் ஆவின் அதிக லாபம் ஈட்டியதாக சுய தம்பட்டம் அடித்துக் கொண்டீர்கள். ஆனால் பால் கொள்முதல் குறைந்தது குறித்து கவலைப்பட மறந்து போனீர்கள்.

ஆவினில் பால் கொள்முதலை அதிகரித்து, பால் மற்றும் பால் சார்ந்த உப பொருட்களின் உற்பத்தியை நேரடியாக செய்யாமல் நூடுல்ஸ், பிஸ்கெட், முறுக்கு, மிக்சர், ஹெல்த் மிக்ஸ், கேக் விற்பனை செய்யப்போவதாக வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு, அதனையும் சொந்தமாக உற்பத்தி செய்யாமல் தனியாரிடம் வாங்கி இடைத்தரகு வேலையை மட்டும் செய்து ஆவினை அழிவின் பாதையில் நடைபோட வைத்துள்ளீர்கள்.

தற்போது "ஆவின் கூல்டிரிங்ஸ்" அறிமுகம் செய்ய இருப்பதாக கூறியிருப்பது ஆட்டுப் பால், நாட்டுப் பசும் பால், தண்ணீர் பாட்டில் போன்று வெற்று அறிவிப்பாகி, கேக், இனிப்பு வகைகள் மூலம் இழப்பு ஏற்பட்டது போல் கூல்டிரிங்ஸ் மூலமும் ஆவினுக்கு இழப்புகள் அதிகமாகி ஆவினை அழித்துவிடாதீர்கள் என்பதை கேட்டுக் கொள்கிறோம்.

தங்களால் முடிந்தால் பால்வளத்துறையை செவ்வனே கவனித்து, ஆவினுக்கான பால் கொள்முதலை கடந்த அதிமுக ஆட்சியில் இருந்ததைவிட பலமடங்கு அதிகரிக்க தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுங்கள். மேலும்  ஊழல், முறைகேடுகள் இல்லாத நிர்வாகத்தை வழங்குமாறும், அதன் மூலம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பால் முகவர்களின் உழைப்பையும் காப்பாற்றுமாறும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in