`வதந்தி தொடர்கதையாகிறது; மதக்கலவரம் உருவாக வாய்ப்பு'- தமிழக அரசை எச்சரிக்கும் பால் முகவர்கள் சங்கம்

`வதந்தி தொடர்கதையாகிறது; மதக்கலவரம் உருவாக வாய்ப்பு'- தமிழக அரசை எச்சரிக்கும் பால் முகவர்கள் சங்கம்

ஆவின் பால் பாக்கெட்டில் இடம் பெறும் வாழ்த்துச்செய்தி குறித்த வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவனரும், மாநில தலைவருமான சு.ஆ.பொன்னுசாமி இது குறித்து அரசுக்கு விடுத்துள்ள அறிக்கையில், `தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் சார்பில் உற்பத்தி செய்யப்படும் பால் பாக்கெட்டுகளில் பெரும்பான்மையான இந்துக்கள் கொண்டாடுகின்ற தீபாவளி, பொங்கல், சிறுபான்மை மக்களான இஸ்லாமியர்கள் கொண்டாடும் ரம்ஜான், கிறிஸ்தவர்கள் கொண்டாடும் கிறிஸ்துமஸ் மற்றும் அனைத்து தரப்பினராலும் பொதுவாக கடைபிடிக்கப்படும் ஆங்கில புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளுக்கு ஆண்டுதோறும் வாழ்த்துச்செய்தி அச்சிட்டு வெளியிடப்பட்டு வருவது திமுக, அதிமுக என இரு கட்சிகளின் ஆட்சியிலும் பல ஆண்டுகளாகவே தொடரும் நிகழ்வாகும்.

ஆனால் தமிழகத்தில் மதத்தின் பெயரால் ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்டு வருபவர்களால் கடந்த சில ஆண்டுகளாகவே ஆவின் பால் பாக்கெட்டுகளில் ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு வாழ்த்துச் செய்தி அச்சிட்டு வெளியிடும் தமிழக அரசு விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துச் செய்தி வெளியிடுவதில்லையே ஏன்? இந்துக்கள் என்றால் ஏளனமா? என சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்பி இந்து, இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரிவினையை உருவாக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றனர்.

பொன்னுசாமி
பொன்னுசாமி

அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகத்தில் மதத்தின் பெயரால் வன்முறையை நிகழ்த்தத் துடிக்கும் தீயசக்திகளுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

மதங்களால் பிரிந்திருந்தாலும் உணர்வால் தமிழர்களாகவும், இந்தியர்களாகவும் ஒற்றுமையாக, உடன்பிறவா சகோதர, சகோதரிகளாக, ஒரு தாய் பிள்ளைகளாக வாழ்ந்து வரும் தமிழகத்தில் இரு மதத்தினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் இவ்வாறான தவறான தகவல்கள் கடந்த சில ஆண்டுகளாகவே பரப்பப்பட்டு வருகின்றன.

அதிலும் குறிப்பாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் நாட்களில் மட்டும் வாட்ஸ் அப், ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதிகளவில் அதுபோன்ற வதந்திகளை பரப்பி அமைதிப்பூங்காவாக திகழும் தமிழகத்தில் அமைதியை சீர்குலைத்து, வன்முறையை அரங்கேற்ற திட்டமிட்டு இது போன்ற விஷமச் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு வதந்திகளை பரப்புகிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதியன்று சென்னை மாநகர காவல் ஆணையருக்கு இணையதளம் வாயிலாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

ஆனால் அது போன்ற வதந்திகளை தடுக்க காவல்துறையோ, அப்போதைய தமிழக அரசோ, ஆவின் நிர்வாகம் தரப்பிலோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் அது தற்போது வரை தொடர்கதையாக இருப்பதோடு இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் அதே வதந்திகள் இன்னும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதனை தடுக்க வேண்டிய தமிழக அரசோ, மறுக்க வேண்டிய ஆவின் நிர்வாகமோ அமைதியாக வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. ஆவினில் மக்கள் தொடர்பு அதிகாரி என ஒருவர் இருக்கிறாரா, இல்லையா? என்பதே தெரியவில்லை. இந்த நேரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட தகவலின் அடிப்படையில் அண்டை மாநிலமான கர்நாடகாவில் மதக்கலவரம் உருவானதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

எனவே சமூக வலைதளங்களில் வருகின்ற இது போன்ற வதந்திகளை பொதுமக்களும் உண்மையென நம்பி எவருக்கும் பகிர வேண்டாம் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதோடு, காட்டுத்தீ போல் வாட்ஸ் அப், ட்விட்டர் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் மேற்கண்ட வதந்திகளை தடுத்து நிறுத்த தமிழக அரசும், காவல்துறையும் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும். சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in