வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு கூடுதல் பேருந்துகளை இயக்குங்கள்: கோரிக்கை விடுக்கும் ம.நீ.ம

வண்ணத்துப்பூச்சி பூங்கா
வண்ணத்துப்பூச்சி பூங்கா

ஸ்ரீரங்கத்தில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவிற்கு மக்கள் சிரமமின்றி  சென்று வரும் வகையில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம்  கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்து அக்கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர்குமார் கூறுகையில், "இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா திருச்சி ஸ்ரீரங்கம் மேலூரில் அமைந்துள்ளது.  நாள்தோறும் இந்த பூங்காவிற்கு வருகை தரும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள்  எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  திருச்சியில் திரையரங்குகள், கோயில்களை தாண்டி பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் பெரிதாக இல்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மேற்படி வண்ணத்துப்பூச்சி பூங்கா மிகப்பெரிய பொருட்செலவில்  ஏற்படுத்தப்பட்டது.

ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில்  இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு ஸ்ரீரங்கத்திலிருந்து செல்ல ஒரு சில அரசு பேருந்துகளை தவிர வேறு போக்குவரத்து சேவை கிடையாது. மேலும் வெளியூர் பயணிகள் தனியார் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் தான் கட்டணம் செலுத்தி மேற்படி பூங்காவிற்கு செல்ல வேண்டியுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தும் சிலர் வெளியூர் சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றி அதிக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுகிறது. 

எனவே போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் கும்பகோண கோட்ட திருச்சி மண்டல போக்குவரத்து கழக பொதுமேலாளர் ஆகியோர் இதில் கவனம் செலுத்தி,   திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் வரை செல்லும் அரசு பேருந்துகளை வண்ணத்துப்பூச்சி பூங்கா வரை நீடித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மேலும் மினி பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோக்களுக்கு அனுமதியளித்து சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in