`அவரின் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு தண்டனையை குறையுங்கள்'- கரூர் கலெக்டருக்கு வேண்டுகோள்

கலெக்டர் பிரபுசங்கர்
கலெக்டர் பிரபுசங்கர்

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது பொது  பெண்ணுக்கான வார்டை பொது என மாற்றி தேர்தல் நடத்திய தேர்தல் அதிகாரிகள்  நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதை  ரத்து செய்து பணிநீக்க உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது

2019-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம் சித்தலவாய் ஊராட்சி 6-வது வார்டு உறுப்பினர் பதவி, பொது (பெண்கள்) பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு தேர்தல் நடத்தும் அலுவலராக அப்போதைய வட்டார வளர்ச்சி அலுவலர் நா.வெங்கடாசலம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக உதவியாளர் கே.சிவக்குமார் ஆகியோர் செயல்பட்டனர்.

ஆனால், வேட்பு மனுக்களை பெறும்போது, பொது(பெண்கள்) பிரிவினருக்கு பதிலாக பொதுப் பிரிவினருக்கு என தவறுதலாக அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டு, உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் இது குறித்த தகவல் தெரியவந்து இருவர் மீதும் ஒழுங்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.  இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்கள் இருவரையும் நிரந்தர பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர்  உத்தரவிட்டுள்ளார். இது மிக கடுமையான,  அதிகபட்ச நடவடிக்கை என கூறும் அரசு ஊழியர்கள் இந்த நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் இதுகுறித்து  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள சித்தலவாய் ஊராட்சியின் 6-வது வார்டுக்கான ஒதுக்கீடு பொது(பெண்) என்பதற்கு பதிலாக பொதுப்பிரிவுக்கு உதவி தேர்தல் அலுவலர் ஒதுக்கீடு செய்து 2019-ம் ஆண்டின் இறுதியில் தேர்தல் நடத்தி தேர்வு சான்று வழங்கியுள்ளனர்.

தற்போது விசாரணையில் மிக கடுங்குற்றமாக கருதி இயற்கை நியதிக்கு முரணாக சிறிதளவும் வாய்ப்பளிக்காமல் அப்போதைய தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆணையாளருமான  வெங்கடாச்சலத்தை நிரந்தர பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டிருப்பது தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களையும், பணியாளர்களையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர் பல்வேறு கடும் நெருக்கடிகளுக்கு இடையே 23 ஊராட்சி தலைவர்கள், 20 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 2 மாவட்ட கவுன்சிலர், 246 வார்டு உறுப்பினர்கள் என மிக அதிகமான எண்ணிக்கையில் பிரதிநிதிகள் தேர்வு செய்யும்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்தான் இதனை கூர்ந்து கவனித்து திறம்பட செய்திருக்க வேண்டும். 

வாக்காளர் பட்டியல் தயாரிப்பது, பூத் சிலிப் தயாரித்தல், பயிற்சிகள், தேர்தல் நடத்தும் அலுவலர் நியமனம், அறிக்கைகள் சமர்ப்பித்தல், வாக்குச்சாவடி மையங்கள் தயார் படுத்துதல்,  பர்னிச்சர்கள், வாக்குபெட்டிகள், காவல்துறை பணிகள்,  வாக்குசீட்டு பிரின்டிங் பணிகள், அதனை சரிபார்த்தல், வேட்பாளர் பட்டியல் இறுதி செய்தல், சின்னங்கள் ஒதுக்குதல், ஆய்வுக்கூட்டங்களில் பங்கெடுத்தல் என எண்ணிலடங்கா பிரச்சினைகளில் தவிக்கும் சூழலில் இத்தவறுக்கு தேர்தல் நடத்தும் அலுவலரை முழுப்பொறுப்பாக்கி நிரந்தர நீக்கம் செய்துள்ளது சரியன்று.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் 2016-ம் ஆண்டில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தலின்போது இதே ஊராட்சியில் உதவி தேர்தல் அலுவலராக இருந்துள்ளார். அப்போது இந்த வார்டு பொது பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. குற்றம் பெரிதாயினும், அதற்கு வழங்கப்பட்ட தண்டனை என்பது ஒரு அரசு பணியாளர் மீது எடுக்கப்பட்ட உட்சபட்ச தண்டனையாக உள்ளது.

எனவே கரூர் மாவட்ட ஆட்சியர்,  வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலத்துக்கு  வழங்கப்பட்ட உயர் தண்டனையை ரத்து செய்வதுடன் கடந்த காலத்தில் அவர் இத்துறையில்  ஆற்றிய ஆத்மீகமான பணியையும், அவரின் குடும்ப நிலையையும் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனை வழங்கி மீள பணியில் சேர நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறோம்' என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in