நடிகர் அஜித் ரசிகர்கள் விசில் அடிச்சான் குஞ்சுகளா?: கேள்வி எழுப்பும் பால் முகவர்கள் சங்கம்

நடிகர் அஜித் ரசிகர்கள் விசில் அடிச்சான் குஞ்சுகளா?: கேள்வி எழுப்பும் பால் முகவர்கள் சங்கம்

'துணிவு' பட வெளியீட்டின்போது ரசிகர்கள் கட் அவுட்டுகளுக்கு பாலபிஷேகம் செய்வதைத் தவிர்க்கும்படி  உத்தரவிட வேண்டும் என்று  நடிகர் அஜித்திற்கு தமிழ்நாடு பால்முகர்கள், தொழிலாளர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது

இதுகுறித்து அந்த சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி நடிகர் அஜித்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.  அதில்," தங்களது நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம்  'துணிவு' பொங்கலுக்கு வெளியாகும் நிலையில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வாழ்த்துகிறோம்.

இத்தருணத்தில் எதிர்கால தலைமுறை நலனைக் கருத்தில் கொண்டு தங்களுக்கு  கோரிக்கை ஒன்றை விடுக்கிறோம். உங்களைப் போன்ற முன்னணி நடிகர்களின் படம் வெளியாகும் நாளில் அங்கு வைக்கப்பட்டுள்ள மிக உயரமான கட் அவுட்டுகளில் தங்கள் உயிரை பணயம் வைத்து  ரசிகர்கள் ஏறிச்சென்று மாலை அணிவிப்பது,  பாலபிஷேகம்  செய்வது, கற்பூர ஆரத்தி காட்டுவது  ஆகியவற்றை மேற்கொள்கிறார்கள்.

அது போன்ற சமயங்களில் பல நேரங்களில் அந்த ரசிகர்கள் கீழே விழுந்து உயிர் பலியாவதும்,  உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவதும் தொடர்கதையாக நடக்கிறது. எனவே, தாங்கள் தங்கள் ரசிகர்களுக்கு இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 

அதன் மூலம் பல ஆயிரம் லிட்டர் பால் வீணாவதை தடுக்கப்படும்.  அத்துடன்  சில இடங்களில் பால் திருட்டுப் போகாமல் முகவர்கள் காப்பாற்றப்படுவார்கள். 

ரசிகர்கள் என்பவர்கள் அணுகுண்டுக்கு இணையான சக்தி கொண்டவர்கள் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். அணுகுண்டை சில நாடுகள் அழிவுக்கு பயன்படுத்தும் வேளையில்  ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில் ரசிகர்கள் எனும் மாபெரும் அணுகுண்டு சக்தியை வெறும் விசில் அடிச்சான் குஞ்சுகளாக வைத்திடாமல்  ஆக்கப்பூர்வ பணிகளை செய்யும் அளப்பரிய சக்தியாக  மாற்றிடச் செய்வதும், அவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பாக அமைத்துக் கொள்வதும் தங்களின் கரத்திலும் குரலிலும் தான் இருக்கிறது.

எனவே, தங்கள் ரசிகர்களுக்கு 'துணிவு' பட ரிலீஸின்போது  கட் அவுட்களுக்கு மாலை போடுவது,  பாலபிஷேகம் செய்வது,  கற்பூர ஆரத்தி காட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று அன்பு கட்டளையிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in